கரோனா வைரஸின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நமது பாரதத்திற்கு உதவ நாற்பதுக்கும் அதிகமான நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. ரஷ்யாவில் இருந்து 2 சரக்கு விமானங்களில் அவசர கால மருந்துகள் 22 டன் வந்துள்ளன. அமெரிக்கா ஆக்சிஜன் சிலிண்டர்கள், பரிசோதனை கருவிகள் என பலவற்றை அனுப்புகிறது. மேலும், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ரெம்டெசிவர் மருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. சீனா ஆதரவு கரம் நீட்டுகிறது. ஐ.நா உதவிகளை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளது. ருமேனியா, குவைத், நியூசிலாந்து மொரீஷியஸ், லக்சம்பர்க் உள்ளிட்ட பல நாடுகள் மருந்துகள் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன. ரஷ்யா ஸ்புட்னிக் தடுப்பூசியை நேற்று வழங்கியது. அதனை இங்கு தயாரிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் இருந்து உலகெங்கும் கொரோனா பரவியபோது அந்த முதல் அலையில் பல நாடுகள் சிக்கி சினாபின்னமாயின. அவை என்ன செய்வதென்றே தெரியாத சூழலில், அந்த நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிடமால், ரெம்டிசிவர் உள்ளிட்ட பல உயிர் காக்கும் மருந்துகளையும், பி.பி.இ உடைகள், என்-95 மாஸ்க், மருத்துவ உகரணங்கள் என அவர்கள் கேட்காமலேயே கொடுத்து உதவியது நம் பாரதம். கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தபோது அதனை கண்டுபிடித்த நாடுகள் தங்கள் நாட்டுக்கு மட்டுமே அவற்றை சுயநலமாக பயன்படுத்தி வந்த சூழலில், நமது கண்டுபிடிப்பான கோவேக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகளை பல ஏழை நாடுகள், அண்டை நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல முன்னேறிய நாடுகளுக்கும் கொடுத்து உதவியது பாரதம். இதற்கு அந்த நாடுகள் நன்றி தெரிவித்த விதங்களை உலகே அறியும். தற்போது நமது நாடு ஒரு இக்கட்டில் உள்ளபோது நாம் கேட்காமலேயே அவர்கள் தாமாக முன்வந்து கொடுத்து உதவுகின்றனர்.
பல தொழில்நுட்ப முன்னேற்றங்களால் உலகே உள்ளங்கையில் சுருங்கிவிட்ட தற்போதைய காலகட்டத்தில், எந்த நாடும் தனித்து இயங்க முடியாது, தனித்து முன்னேற முடியாது என்பதுதான் எதார்த்தம். அதேபோல, கொரோனா போன்ற பெரும் தொற்றையும் தனியாக எதிர்த்து போரிட்டு வெல்ல முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு ஒரு குடும்பமாக வாழும் முறையே வெற்றிக்கு அடிப்படை. இதனைதான் நமது ஹிந்து பாரம்பரியம் உலகே ஒரு குடும்பம் என பொருள்படும் ‘வசுதைவ குடும்பகம்’ என கூறியுள்ளது.
-சத்ய புத்திரன்