பிரான்ஸிலுள்ள தமிழ்க் கலாசார மன்றம், பிரான்ஸ் அரசு அனுமதியுடன் பிரான்சில் பாரீஸ் அருகேயுள்ள செர்ஜி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவவுள்ளது. இச்சிலையை குடியரசுத் தலைவர் விருது பெற்ற புதுச்சேரி சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திருவள்ளுவர் சிலை வெண்கலத்தில் 7 அடியில் 600 கிலோ எடையில் உருவாகிறது. இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் சிலை விமானத்தில் பிரான்ஸ் எடுத்து சென்று நிறுவப்படும். வரும் நவம்பர் 11ல் திறப்பு விழா நடத்தவும் அதையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஏற்கனவே, கடந்த 2011ல் மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச் சிலையை அங்கு நிறுவியுள்ளது. மேலும், தமிழ்க் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்ஸில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.