திருமாவளவனின் ஹிந்து விரோதம்: தமிழக பா.ஜ., கண்டனம்

‘விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஹிந்து விரோத செயல்பாடுகளை தவிர்த்து, மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
‘நந்தன் வழிபட்டதால், நடராஜர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள, சுவரை தகர்த்து வாசலை திறந்து விட வேண்டும்’ என, திருமாவளவன் கூறியுள்ளது, மீண்டும் ஒரு கட்டுக் கதையை சொல்லி, மக்களை குழப்பும் ஹிந்து விரோத செயலே.

நந்தன் வழிபட்டது திருப்புன்கூர் சிவலோக நாதர் கோவில். இது உலகறிந்த உண்மை. அப்படி இருக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில், நந்தன் வழிபட்டது போன்ற மாயையை உருவாக்குவது; அங்கு திருப்பணி முடிந்து அமைக்கப்பட்ட சுவரை, தீண்டாமை சுவர் என வதந்தி பரப்புவது; மலிவான அரசியல் மட்டுமல்ல, ஹிந்துக்கள் மீதான வெறுப்பின் உச்சம்.

தொடர்ந்து ஹிந்து மத இதிகாசங்களை பரிகாசம் செய்வது, அவமானப்படுத்துவது, ஆங்கிலேயர்கள் உண்மைக்கு புறம்பாக எழுதிய நுால்களை, ‘மனுஸ்மிருதி’ என பொய் சொல்லி, அதை தீயிட்டு கொளுத்துவது என, இல்லாததை இருப்பது போல் சொல்லி, மக்களை துாண்டி விட்டனர். அதேபோல், நந்தனார் விவகாரத்தில், திருப்புன்கூர் கிராமத்தில் வழிபட்டதை, சிதம்பரம் என்று பொய் சொல்லி துாண்டி விடுவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற ஹிந்து விரோத செயல்பாடுகளை தவிர்த்து, மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளில், திருமாவளவன் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.