நாய்க்கு நன்றி

”ராணி கண்ணு… என் செல்லம்ல. இந்த சோத்தை எடுத்து வாசல்ல நாய்க்கு போட்டுட்டு வாயேன்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அம்மா. “எதுக்கும்மா இப்படி தொல்லப் படுத்தற. தெருவுல இருக்கற நாய்க்கெல்லாம் எதுக்கு சோத்தை கொட்டறே” என்று சலித்துக் கொண்டாள் ராணி. “நமக்கு பசிக்கற மாதிரி அதுக்கும் பசிக்கும் இல்லடா செல்லம். ஜீவராசிகளுக்கு உதவி செய்தா நல்லது தானே” என்றாள் அம்மா.

”எப்படியும் நாம தெருவுல நடந்தா குலைக்கத் தான் போகுது. ம்ஹும் நான் மாட்டேன். நீயும் சோத்தை வீணடிக்காத” என்று முனகியபடி ராணி மறுத்துவிட்டாள். எல்லோருக்கும் உதவி செய்யும் எண்ணம் அவளுக்கு என்றுதான் வரப் போகிறதோ என கவலைப்பட்டபடி, தானே வெளியே சென்று நாய்களுக்கு சோறு போட்டுவிட்டு வந்தாள் அம்மா.

அன்று வீட்டிலிருந்த எல்லோரும் உறவினர் வீட்டுக்குப் சென்றிருந்தார்கள். அங்கே எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது அவளது அப்பாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்களின் வீட்டைக் கொள்ளையடிக்க சிலர் முயற்சி செய்திருப்பதாக அந்த அழைப்பில் சொல்லியிருந்தார்கள். அப்பா பதறியடித்து ராணியையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அவர்களின் வீட்டைச் சுற்றி தெருவில் இருப்பவர்கள் குழுமியிருந்தனர். அவர்களை விலக்கிவிட்டு மூவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டில் பொருள்களும் துணிமணிகளும் சிதறியிருந்ததைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள். “பயப்படாதீங்க, திருடனுங்க வந்தபோது தெருவுல இருக்கற நாயெல்லாம் ஓடி வந்துருச்சுங்க. அவனுங்க மேல பாய்ஞ்சு பொறாண்ட ஆரம்பிச்சிருச்சுங்க. அதனால கொள்ளையடிச்சதை விட்டுட்டு ஓடிட்டானுங்க. உங்க வீட்டுல எதுவும் திருடு போகாம இருக்குன்னா அதுக்கு இந்த வாயில்லா பிராணிங்க தான் காரணம்” என்றார் எதிர்வீட்டு மாமா.

அந்த நேரத்தில் “என்னப்பா ஆச்சு? எல்லோரும் கலைஞ்சு போங்க. இனிமே நாங்க பார்த்துக்கறோம்” என்றபடி காவலர்கள் இருவர் சீருடையில் வந்து சேர்ந்தனர். அப்பாவும், எதிர்வீட்டு மாமாவும் நடந்ததை காவலர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். ராணி அந்த இடத்திலிருந்து வெளியே வந்தாள். தெருவில் இருக்கும் நாய்கள் ஒன்றாக குழுமியிருந்தன. அருகில் மெதுவாக போய் நன்றி சொல்லியபடி, ஒரு நாயைத் தொட்டுப் பார்த்தாள். அது ‘வள்…’ என்று எரிந்து விழுந்தது. ராணி அம்மாவிடம் சென்று, “நாய்களுக்கு இன்னிக்கு சாதம் வைக்கலையா அம்மா” என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தாள்.
ஈவது விலக்கேல்!

-பிரவீண்