நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமரான (2019) பிறகு தனது அமைச்சரவையில் கடந்த 2021, ஜூலை 7-ல் செய்துள்ள பெரும் மாற்றம் அரசியல் அரங்கில் பல அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. அன்று 15 கேபினட் அமைச்சர்களும் 28 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்து வைத்தார். முன்னதாக மோடியின் அமைச்சரவையில் இருந்த 12 மூத்த அமைச்சர்கள் கடைசிநேரத்தில் பதவி விலகியதை பலராலும் நம்ப முடியவில்லை.
அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் இணை அமைச்சர் பதவி (மீன்வளம், கால்நடை வளர்ப்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு) வழங்கப்பட்டிருக்கிறது. கட்சிக்காக உழைப்போர் சாமானியராக இருந்தாலும் உயரிய மரியாதை கிடைக்கும் என்பதை இவரது நியமனம் காட்டுகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. சென்ற ஆண்டே நிகழ்ந்திருக்க வேண்டிய இந்த மாற்றம் கரோனா தொற்றுப் பரவலால் தள்ளிப்போனது.ம.பி.யில் பாஜக ஆட்சி அமைக்கக் காரணமான, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா (விமானப் போக்குவரத்து), அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்வானந்த சோனாவால் (ஆயுஷ், துறைமுகம், நீர்வழிப்போக்குவரத்து), தில்லி பாஜகவின் வளரும் தலைவர் மீனாட்சி லேகி (வெளியுறவு), பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் (சுற்றுச்சூழல், தொழிலாளர், வேலைவாய்ப்பு), உ.பியில் கூட்டணிக் கட்சியாக உள்ள அப்னா தளத்தின் தலைவி அனுபிரியா படேல் (வர்த்தகம் – தொழில்), பிகாரில் கூட்டணிக் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதாதளத்தின் ஆர்.பி.சிங் (உருக்கு), லோக்ஜனசக்தி தலைவர் பசுபதிகுமார் பராஸ் (உணவு பதப்படுத்துதல்), மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் நாராயண் ராணே (சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள்) ஆகியோர் அமைச்சரானோரில் குறிப்பிடத் தக்கவர்கள்.
முன்னதாக, புதிய அமைச்சரவை அமைய ஏதுவாக, மத்திய அமைச்சர்கள் சந்தோஷ் கங்குவார் (தொழிலாளர் நலம்), ரமேஷ் பொக்ரியால் (கல்வி), ஹர்ஷ்வர்த்தன் (சுகாதாரம்), ரவிசங்கர் பிரசாத் (சட்டம், நீதி), பிரகாஷ் ஜாவடேகர் (சுற்றுச்சூழல்), சதானந்த கௌடா (ரசாயனம்) உள்ளிட்ட 12 பேர் ராஜினாமா செய்தனர். அதேபோல மத்திய சமூகநீதித் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் பதவி விலகி, கர்நாடக ஆளுநராக நியக்கப்பட்டுவிட்டார். பதவி விலகிய மூத்த அமைச்சர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், 12 அமைச்சர்கள் விலகிய பிறகே அதனை ஊடகங்கள் அறிந்தன; அதேபோல, புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்கள் யாரென்றுஅறிய முடியாமல் இறுதிக்கணம் வரை தவித்தன.
ஒரு காலத்தில் மத்திய அமைச்சர்களாக வருவோரை தீர்மானிக்கும் சக்தியாகவே ஊடகங்கள் திகழ்ந்ததுண்டு. மன்மோகன் சிங் ஆட்சியில் யார் அமைச்சர் என்பதற்கான ஊடக பேரங்களும் (உ.ம்: நீரா ராடியா) நடந்ததுண்டு. இன்று அதற்கெல்லாம் எந்த வேலையும் இல்லை. பிரதமர் மோடி, யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்கிறார் என்பதை ஊடகங்கள் புரிந்துகொண்டுவிட்டன.
அமைச்சர்களின் பொறுப்புகளும் மாற்றப் பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவுத் துறை, உள்துறை அமைச்சர் அமித் ஷா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தால் மத்திய அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆக உள்ளது. இணை அமைச்சர்களாக இருந்த 7 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.
இந்த அமைச்சரவையின் சராசரி வயது 58-ஆகக் குறைந்துள்ளது. அமைச்சரவையில் உள்ள மிகவும் இளம் அமைச்சர் நிசித் பிரமாணிக் (35). அதேபோல, பட்டியலினம் (18), பழங்குடியினம் (8) சார்ந்தோர் அதிக அளவில் அமைச்சர்களாகி இருப்பது இதுவே முதல்முறை. அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான முயற்சியே இந்த அமைச்சரவை மாற்றம். தங்கள் கட்சி இளம் தலைமுறையினருக்கான கட்சி என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறது பா.ஜ.க. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, அண்மையில் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்ற மேற்கு வங்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்த அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இளமைக்கு வழித்தடம், நாடு முழுவதும் பரவலான பிரதிநிதித்துவம், அனைத்து வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம், தகுதி யானவர்களுக்கு வாய்ப்புகள், சமூக ஒருமைப்பாட்டுச் சிந்தனை, வருங்கால தேர்தல் வியூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த அமைச்சரவைவிரிவாக்கத்தை பிரதமர் மோடி நிகழ்த்தி யுள்ளார் எனலாம்.
-சேக்கிழான்