துவங்கியது சர்வதேச சிறுதானிய ஆண்டு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை அறிவித்தது. இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டில் பாரதத்தை சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு கண்ணோட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாரதத்தில் விளைந்த முதல் தானியம் சிறுதானிம்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்ட போதிலும், ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக சிறு தானியங்களே உள்ளன.

பாரதத்தில் காரீஃப் பருவத்தின் முதன்மை தானியமான சிறுதானியங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உலகம் முழுவதும், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டே ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில், மத்திய அரசு சிறுதானியங்களை முன்னிலைப்படுத்தியது.

2022 டிசம்பர் 6ம் தேதி ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023க்கான துவக்கவிழாவை இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பாரதத்தின் சார்பில் அதிகாரிகள் குழு பங்கேற்றது. இதையடுத்து, சர்வதேச அளவில், சிறுதானியங்களை முன்னெடுத்துச் செல்வதை மத்திய அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனை அடைவதில் அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், விவசாயிகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வணிகர்கள், உணவங்கள் மற்றும் தூதரகங்கள் ஒருகிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக ஜனவரி மாதம் 15 நாட்கள், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் சார்பில், 15 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதில், விளையாட்டு வீரர்கள், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களைக் கொண்டு, விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுதல், வெபினார்களை நடத்துதல் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகத்தின் சார்பில், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழகம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சரியான உணவைப் சாப்பிடுங்கள் என்ற உணவுக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதேபோல சத்தீஸ்கர், மிஸோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஜனவரி மாதம், சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம், பெல்ஜியத்தில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில், வேளாண் ஏற்றுமதியாளர்கள், அபேடா உள்ளிட்ட பல பாரத வேளாண் அமைப்புகள், சிறுதானியத்தை முன்னிறுத்தும் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த உள்ளன. 140 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், சிறுதானிய ஆண்டு 2023’ஐ கொண்டாடும் வகையில், அந்நாடுகள் வாழ் பாரத மக்கள் பங்கேற்கும், கண்காட்சிகள், உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றை நடத்தும். இந்த ஆண்டு முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதேபோல, பாரதம் தலைமையேற்று நடத்தவுள்ள இந்த ஆண்டு ஜி20 மாநாட்டு கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடும் அனுபவத்தை வழங்குதல், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினருடன் கலந்துரையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.