கரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. என கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு வாங்க வேண்டிய கட்டணம் மற்றும் தனியார் மருத்துவமனையில் 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படுவதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது? அரசாணையை மீறி கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்ய வேண்டும்? அரசாணையை மீறுவோர் மீது எந்தெந்த பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்? என்ன தண்டனை வழங்கப்படும்? அரசாணை சரியாக அமல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை கண்காணிக்க வேண்டியது யார்? உத்தரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் இருப்பதுபோல் தனியார் மருத்துவமனைகள், அவற்றில் உள்ள படுக்கை வசதி, சிகிச்சைக்கான கட்டணம் ஆகியவற்றை மக்களுக்கு தெரிவிக்க அரசே ஏன் தனியாக ஒரு இணையதளத்தை ஏற்படுத்தக் கூடாது? தமிழக முதல்வர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்? தமிழ்நாடு அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற விவரங்களை மத்திய, மாநில அரசுகள் மே 12-ல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.