வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்ட கரோனா தொற்றாளர்கள் கவனிப்பு முறையின் தரத்தை மேம்படுத்த, அம்மா கிளினிக் மருத்துவர்கள் 200 பேர், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 120 மருத்துவர்கள் என 320 மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட குழுக்கள், வீடுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை தினமும் நேரில் சந்தித்து, அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க உள்ளனர் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 33 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 சதவீதம் உயர்மருத்துவ சிகிச்சை பெறும் நிலையிலும் 70 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் 20 சதவீதம் பேர் கரோனா பராமரிப்பு மையத்திலும் உள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் நந்தம்பாக்கத்தில் 860 ஆக்சிஜன் படுக்கைகள், 140 சாதாரண படுக்கை வசதிகள், ஈஞ்சம்பாக்கம், மணலி ஆகிய இடங்களில் உள்ள சமுதாய நல மையங்களில் தலா 100 படுக்கைகள், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 240 படுக்கைகள் என சுமார் 1,440 ஆக்சிஜன் படுக்கைகள், அடுத்த 10 நாட்களில் அமைக்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளார்.