பாரதத்தை ஆண்ட வெள்ளையர்கள் ஜம்மு காஷ்மீரின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப, 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் அறிவித்து செயல்பட்டு வந்தனர். அதிக குளிரில் இருந்து தப்பிப்பிதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்காக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஆவணங்களும், ஊழியர்களும், அதிகாரிகளும் ஜம்முவுக்கும், ஸ்ரீநகருக்கும் இடையே வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதனால், இது ‘தர்பார் மாற்றம்’ என்று அழைக்கப்பட்டது. கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இவற்றுக்கு 2 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்ஹா, ‘இப்போது இருப்பது மின்னணு யுகம். அரசு பணிகள் அனைத்தும் மின்னணு மயமாக்கப்பட்டு விட்டது. எனவே, இனிமேல் இரட்டை தலைநகர நடைமுறை தேவையில்லை. எனவே, இரட்டை தலைநகர நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தார்.’ இதனால் கடந்த 149 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த தர்பார் மாற்றம் முடிவுக்கு வந்துள்ளது.