ஊழலின் ஊன்றுகோல்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், தி.மு.க ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்களை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்தி வருகிறார். தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் ஊழல், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஊழல், மின் வாரியத்தில் முறைகேடு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வாங்குவதில் முறைகேடு, ஜி ஸ்கொயர் கட்டமான நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் செயல்பாடு என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழக ஆளுநரிடம் வரும் 20ம் தேதி அமைச்சர்கள் மீதான புகார் புத்தகத்தை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் சிவகங்கையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் ஹெச். ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நையினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஏராளமான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் குவிந்தனர். இதில் பேசிய அண்ணாமலை, ‘மத்திய அரசு ரூ. 42க்கு அரிசி வாங்கி தமிழக அரசுக்கு ரூ. 2க்கு தருகிறது. ஆனால் ரூ. 2’ஐ மட்டுமே கொடுத்துவிட்டு கருணாநிதியின் ஸ்டிக்கரை ஒட்டி ஏழை பங்காளனாக கபட நாடகமாடி வருகிறது தி.மு.க அரசு. கடந்த ஓராண்டாக ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக மட்டுமே தி.மு.க செயல்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது. அதில் சம்பந்தப்படாத அமைச்சர்களே இல்லை. இது குறித்து பேசிய முதல்வர் சிறிய தவறு நடந்துவிட்டது, அந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் ஒரு நிறுவனம் கூட கருப்பு பட்டியலில் வைக்கப்படவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் கோபாலபுரத்தில் உள்ளவை.

கர்ப்பிணி பெண்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ‘அம்மா பெட்டகம்’ அறிவிக்கப்பட்டு அதில் 8 பொருட்களில் ஒன்றாக ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊட்டச்சத்து மாவை, பொங்கல் தொகுப்பு வழங்கிய அதே நிறுவனம்தான் வழங்கியுள்ளது. பொங்கல் தொகுப்பையே தரமில்லாமல் வழங்கிய அந்நிறுவனத்தின் ஊட்டச்சத்து மாவால் தாயும் குழந்தையும் எவ்வாறு நலமாக இருக்க முடியும்? ஒரு நாள் ஊழல் இல்லாத அரசை தமிழகத்தில் நடத்தி காட்டுங்கள். ஆனால், அது முடியாது. ஏனெனில் அந்த லஞ்சத்திற்கு ஊன்றுகோலாக இருப்பதே தி.மு.க அரசுதான். இந்த மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தொகுதிக்கான நலத்திட்டத்தில் பங்கேற்கும் செய்திகளில் வருவதை காட்டிலும் தினமும் முறைகேடு வழக்குகளுக்காக செய்திகளில் வருகின்றனர்’ என கூறினார்.