தடுப்பூசி மோசடியின் தலைநகர்

மேற்கு வங்கத்தில், கடந்த ஜூன் 23ல் ஜாதவ்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்ரவர்த்தி கொல்கத்தா மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு தடுப்பூசி முகாமில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ஆனால், அவருக்கு செலுத்திக் கொண்டதற்கான குறுஞ்செய்தி கிடைக்கவில்லை அவருடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 250 பேருக்கும் குறுஞ்செய்தி வரவில்லை. மிமி, காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து போலி தடுப்பூசி முகாமை நடத்திய டெபஞ்சன் தேவ் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹவுராவில் உள்ள மங்கூர் பகுதியை சேர்ந்த குட்டியா என்பவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே அவருக்கு செலுத்திக் கொண்டதாக குறுஞ்செய்தி வந்தது. தன் பெயரில் அந்த தடுப்பூசி விற்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார் அவர். பாலிகுங் கோல்ட் செயின் டிப்போவில் சுமார் 60 ஆயிரம் தடுப்பூசிகள் களவு போயின. ஒரு வாரம் கழித்து, பவானிபூரின் சேட்லா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெளியில் தெரிந்த பனிப்பாறையின் சிறு பகுதிதான். இதில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், தடுப்பூசியின் கள்ளச் சந்தை தலைநகரமாக மேற்கு வங்கம் மாறிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.