சுவாமி விவேகானந்தர் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமது கருத்துகளை பிரச்சாரம் செய்ய முற்பட்டபோது பாரதத்தின் நிலை என்ன தெரியுமா? ஆங்கிலேயக் காலனியாதிக்கம் உச்சத்தில் இருந்தது. நமது நாடு அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டுப் பொருளாதார ரீதியாக ஏழ்மைப்படுத்தப்பட்டு சமூகரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்தது. மக்கள் அச்சத்தால் மௌனிகளாக உறைந்து கிடந்தனர். ஆங்கிலேயர்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை வஞ்சித்து பாரதியர்களை ஒருவருக்கொருவர் சண்டை யிட்டுக்கொள்ள வைத்தனர். பாரதத்தின் மற்ற பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு அடங்கிய மன்னர்களாலும் கொடுமைக்கார நிலப்பிரபுக்களாலும் அடக்கப்பட்டுவந்தன.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அமைத்த 5 வருடங்களுக்குள் ஒரு பஞ்சம் தோன்றியது. இத்தகைய மிகப்பெரிய அளவிலான பஞ்சம் எதையும் பாரதம் தனது வரலாற்றில் கண்டதில்லை. அந்தப் பஞ்சத்தில் மடிந்த வர்களின் எண்ணிக்கையை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? ஒரு கோடி பாரதியர்கள்! அது இன்று கோவிட் –-19 உலகம் முழுமையிலும் காவுகொண்ட எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு! அவர்களில் 30 சதவீதம்பேர் பட்டினியாலும் அச்சத்தாலும் எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசமுடியாமலும் மாண்டனர்.
ஆனால், இந்த சோகம் சிறியதுதான். பெரிய சோகம் என்றால், அன்றைய தரம் தாழ்ந்த பாரத சமூகம் இதை சாதாரணமாக ஏற்றுக் கொண்டது தான். எல்லாம் தலையெழுத்து என அன்று இந்தியர்கள் விதியுடன் சமரசம் செய்து கொண்டார்கள். இந்நிலையை மாற்ற முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். இதை எதிர்த்து ஒன்றுசேர்த்து ஒருங்கிணைந்த குரலெழுப்ப தேவைப்படும் வலிமை இல்லாதுபோன நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். தம் நாட்டின் சக மக்களையே அடக்குமுறை செய்யுமளவுக்கு நாட்டின் உள்ளூர்ப் படைகளிலும், போலீஸ் படையிலும் அவர்களை சேரச்செய்தது அன்றைய ஏழ்மை.
சுவாமி விவேகானந்தர் வித்தியாசமானவராக இருந்தார். இளைஞராக இருந்தபோது அவருக்கு வசதிவாய்ப்புகள், ஆதரவாளர்கள் என எதுவுமில்லாமல் அந்த யுத்த களத்தில் குதித்தார். உறங்கிக்கொண்டிருந்த பாரதத்தை எழுப்ப முனைந்தார். இந்தப் பின்னணியில்தான் “எழுமின், விழிமின்! குறி சாரும் வரை நில்லாது செல்மின்” என்று அறைகூவல் விடுத்தார். மக்களின் அந்த நிலை அவரால் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது. பாரதத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்திலிருந்து ஊக்கமும் சக்தியும் பெற்ற அவரால் கோடானுகோடி பாரத மக்கள் தன்னம்பிக்கை பெற்றார்கள். தங்கள் தலையெழுத்தை மாற்ற முடியுமென தீர்மானித்துக் களமிறங்கினார்கள். இவ்விதம் சுவாமிஜி மேற்கொண்ட செயல்பாடு, இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து பாரதம் விடுபட்டு சுதந்திரம்பெற பாதைபோட்டது.
கட்டுரையாளர் : தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்;ஜனவரி 12 தேசிய இளைஞர் தினத்தன்று தில்லி ஜே.என்.யூவில் நிகழ்த்திய உரையிலிருந்து.
(நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்)