துலுக்கப்பட்டிகளும் ஏகனாம்பட்டிகளும்

 மணப்பாறையை அடுத்த துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  9 வயது சிறுவன் லோகித்,  ஜூலை 28 அன்று விவசாய கிணற்றில் குளிக்கும்போது ஒரு சிறுமியை மூழ்காமல்  காப்பாற்றினாலும் தன் அத்தை மூழ்காமல் காப்பாற்ற (முடியாமல் போனாலும்) தன்னுயிரை பணயம் வைத்து முயற்சி  செய்த செய்தி அறிந்து ஓர் உயிரை காப்பாற்றியதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் பரிசளித்து பாராட்டியிருக்கிறார். அப்போது  லோகித் சொன்னதுதான் நமக்கு முக்கியம். “எனக்கு இன்னும் அதிக பலம் இருந்திருந்தால் என் அத்தையையும் காப்பாற்றியிருப்பேன்”.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏகனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  7 வயது  சிறுவன் தர்ஷன் தன் நண்பன் ஒருவனுடன் குளத்தில் மீன் பிடிக்கப் போனபோது கொடிய விஷம் கக்கும் கண்ணாடிவிரியன் பாம்பு அவனை கடித்து விட்டது. உடனே ஒரு தடியை எடுத்து பாம்பைக் கொன்றான். பாம்புடன் வீட்டுக்கு ஓடி வந்து  பாம்புக்கடி பற்றி பெற்றோரிடம் தெரிவித்தான். விஷ முறிவு மருத்துவம் செய்ய முடிந்ததால்  தர்ஷன் உயிர் பிழைத்தான்.  உன்னைக் கடித்த பாம்பை ஏன் கொண்டு வந்தாய் என்று டாக்டர் கேட்டதற்கு “என்னை கடித்தது எது என்று உங்களுக்குத் தெரிந்தால்தானே சரியான மருந்து  கொடுப்பீர்கள்?” என்று தர்ஷன் சொன்ன பதில்தான் இங்கே முக்கியம்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு செய்தித் துணுக்குகள் தான் இவை. ஆனால் இரண்டும் சுட்டிக்காட்டுவது ஒரே விஷயத்தை: கிராமப்புற இளைய தலைமுறைக்கு சாமர்த்தியம் இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, சுறுசுறுப்புக்கும் குறைவில்லை. வாய்ப்புக் கொடுத்தால் போதும், ஜமாய்த்து விடுவார்கள்.
தேசிய கல்வி கொள்கை செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டு ஆவதை ஒட்டி சென்ற வாரம் ’வித்யா பிரவேசம்’  என்ற புதிய திட்டத்தை பாரதப் பேரரசு அறிவித்தது. நகர்ப்புற, வசதி படைத்த குடும்பத்து பிள்ளைகள்தான் பிளே ஸ்கூல் மூலம் விளையாட்டாக, குதூகலமாக கல்வியைத் தொடங்கவேண்டும் என்பதில்லை, தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளும் இந்த வாய்ப்பைப் பெறவேண்டும் என்பதற்கான திட்டம்தான் இது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
வித்யா பிரவேசம் செய்ய நாடு நெடுக  துலுக்கப்பட்டிகளிலும் ஏகனாம்பட்டிகளிலும் லோகித், தர்ஷன் போன்ற ஆர்வம் நிரம்பிய குட்டி குட்டி பயனாளிகள்  தயார் என்பதுதான் மகிழ்ச்சி தரும் செய்தி.  மொழித் திணிப்புப் புரளி கிளப்பி தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் மனப்பான்மைக்கு மரண அடியாக புதியதாக சைகை மொழியை ஒரு மொழிப்பாடமாக அறிமுகப்படுத்துகிறது பாரதப் பேரரசு. இது மாற்றுத்திறனாளிகளின் மனதை குளிர்விக்கும் மொழி என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுதான், பாரதப் பேரரசுதான் என்று சொல்லுவோம், சொல்லிக் கொண்டே இருப்போம், நியாயமாக.