தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஜூன் 7 அன்றுவடபழனி கோயிலுக்குச் சொந்தமான 300கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர்நிலத்தை மீட்டுள்ளார். வரவேற்கலாம். அவர் இத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன், ஆலய சொத்துக்கள் அனைத்தையும் கணினி மயமாக்கி, எல்லோரும் பார்க்கும்படி இணையதளத்தில் வெளியிடப்படும் எனக்கூறிஅந்தப் பணியைத் துவக்கி வைத்துள்ளார்.
அதுபோல, ஆலய சொத்துக்களை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆலய சொத்து ஆக்கிரமிப்புகள், வாடகை, குத்தகை தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அமைச்சரின் விரைவான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பாராட்டலாம், வரவேற்கலாம். ஆனால் தற்போது மீட்கப்பட்ட நிலத்தில் சமுதாய நோக்கத்துடன், உரியவர்களிடம் கலந்து ஆலோசித்து ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது சில கேள்விகளை எழுப்புகிறது:
** ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் தீட்ட சமுதாய நலத் துறை இருக்கிறதே? அமைச்சரின் துறைக்கு ஏன் அந்த வேலை?
** யார் ஏழை? யார் எளியவர்? இப்படி பேசித்தான் கோயில் இடங்களை, நிலங்களை அரசு கபளீகரம் செய்து வந்துள்ளது. 2008ல் வடபழனி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலம் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு, மகளிர் விடுதி கட்ட மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டது. அப்போது நடந்த கருணாநிதி (திமுக) அரசு, “ஏழை மகளிர் பயன்பெற” என விளக்கம் தந்தது. பக்தர்களுக்கு பயன்படும் வகையில் மட்டுமே கோயில் சொத்து பயன் பட்டிருக்க வேண்டும். விளைவு? குத்தகைப் பணம் வரவில்லை. ஊருக்கு இளைத்தவனாய் கிடக்க ஹிந்துக் கோயில் என்ன “பிள்ளையார் கோயில் ஆண்டி”யா?
**கோயில் இடங்களை கோயிலுக்காக, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன் அடைவதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
வடபழனியில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளம் இருந்த இடம் (வடபழனி காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இடம்) ஹிந்து முன்னணி போராடி மீட்டுத்தந்த இடம். ஆனால், மீட்கப்பட்ட இடத்தை பாதுகாக்கக் கூட ஹிந்து சமய அறநிலையத் துறை முயற்சி எடுக்கவில்லை. மீண்டும் அந்த இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு நடந்தது; ஹிந்து முன்னணியினர், பாஜகவினர் போராடினர். இனியும் ஹிந்து சமய அறநிலையத் துறையை ஹிந்து சமுதாயம் ஏன் நம்ப வேண்டும்?
** சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோயில் குளத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசட்டையால் நஷ்டம் ஏற்படுத்தவா ஒரு அரசுத் துறை? ஏழை எளியவர் பயன்பெற என்ற டயலாக் பேசி கோயில் சொத்தில் சமய சார்பற்ற வேலைகள் நடத்த சமய சார்பற்ற அரசு முயற்சிக்க வேண்டாம்.
-பசுத்தாய் கணேசன்