‘தாயைவிட என்மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரால் புகழப்பட்டவரும், பிற்காலக் கம்பர் என்று போற்றப்பட்டவருமான தமிழ் அறிஞர் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருச்சி அருகேயுள்ள எண்ணெயூரில் 1815ல் பிறந்தார். தமிழ்ப் புலவரான தன் தந்தையிடமே தமிழ் கற்றார். அபார நினைவாற்றல் கொண்டிருந்த இவர், பாடல்களைப் படித்த வேகத்தில் மனதில் பதியவைத்துக் கொண்டுவிடுவார். சிறுவயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்ற இவர், பின்னாளில் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமையை வளர்த்துக்கொண்டார். திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் திருக்கரங்களால் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. பிள்ளையவர்கள் காவேரியாச்சி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர் புதல்வர் சிதம்பரம் பிள்ளை.
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் 21 வயதில் திரிசிரபுரம் செட்டி பண்டாரத்தையா என்பாரிடம் சிவ தீட்சை பெற்றார். அன்றுமுதல் அவரை வெண்ணீற்று வேந்தராகவே தமிழகம் வாழ்நாள் முழுவதும் கண்டது. பெரியபுராணப் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவரே. பிள்ளைத்தமிழ் நூல்களாகப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார். ’சிற்றிலக்கிய கால’த்தில் வாழ்ந்த இவர், ஏராளமான தல புராணங்கள் பாடியுள்ளார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவரான இவரிடம் கல்வி பயில வரும் அனைவரையும் தன் சொந்தப் பிள்ளைகளாகவே பாவித்து உணவும், உறைவிடமும் அளித்துக் கல்வி புகட்டினார்.
உ.வே.சா, குலாம்காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் உள்பட பலர் இவரிடம் பயின்றவர்கள். மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்ற நூலை இயற்றினார். சங்கீதத்தில் பற்றுக்கொண்டிருந்த இளைஞர் உ.வே.சாவைத் தமிழில் ஆர்வம் கொள்ளச் செய்து ஆற்றுப்படுத்தியது பிள்ளையவர்களின் சிகரமான தமிழ்த்தொண்டு ஆயிற்று. 2 தல புராணங்கள், 10 பிள்ளைத்தமிழ், 3 சரித்திரங்கள், 2 காப்பியங்கள், 4 பதிகங்கள், 6 பதிற்றுப்பத்தந்தாதி, 3 யமக அந்தாதி, 7 மாலை, 2 கலம்பகம், 3 கோவை, 1 உலா, 2 தூது, 1 குறவஞ்சி என தனது வாழ்நாளில் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை 75க்கும் மேல்! இவரது காலடியில் பொன்னைக்கொட்ட பலர் தயாராகவே இருந்தனர். ஆனால், பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்காத அவரது மனம், என்றும் தமிழ் வளர்ச்சியிலும், சைவ சமயத்திலுமே தோய்ந்திருந்தது.