தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் வன்முறை வெடிக்கலாம். சின்னசேலம் அருகே பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக மக்கள் அதிகாரம் என்ற இடதுசாரி நக்சல் அமைப்பு, தந்தை பெரியார் கழகம், விடுதலை சிறுத்தை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் வெடி மூட்டை மீது அமர்ந்துள்ளது. அது எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம். தஞ்சாவூரில் உள்ள செட்டியார் தெருவில், அனைத்து நக்சல் அமைப்புகளும், மாநாடு நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த மாநாடு நடைபெறக் கூடாது. தமிழக காவல்துறை செயல்பாடு நம்பும்படியாக இல்லை. வன்முறை சம்பவம் பற்றி தகவல் தராத உளவுப் பிரிவு டேவிட்சன் ஆசீர்வாதத்தை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன் ‘மாஜி’ டி.ஜி.பி அலெக்ஸாண்டர் எவ்வளவு பெரிய தேச துரோகி என்பதை, ஆதாரங்களுடன் வெளியிட்டேன். தடை செய்யப்பட்டிருந்த விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் குருநாதர் பாலசிங்கம், அவரது மனைவி அட்லி ஆகியோரை போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் அனுப்பி வைத்தார். அதன் பின், அட்லி எழுதிய புத்தகத்தில், லண்டன் செல்ல உதவியதற்காக அலெக்ஸாண்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதன் நகலை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்திருந்தேன். இதன் மூலம் இப்படி மதவெறி கொண்டவர்கள் தேச விரோதமாகவும் செயல்படுவார்கள் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக டேவிட்சன் ஆசீர்வாதத்தை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.