ஸ்வர்ம் டிரோன் எனப்படுவது பல டிரோன்களை ஒரு ஒற்றை நெட்வொர்க் அமைப்பாக ஒருங்கிணைத்து செயல்படுத்தும் தொழில்நுட்பம். இதில் ஒரு சில டிரோன்கள் முதல் ஆயிரக்கணக்கான டிரோன்களை இணைத்தும், பிரித்தும், ஒரே குழுவாகவும், பல குழுக்களாகவும் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்த முடியும். இதன் ஒரு கூட்டம் மாபெரும் சேதத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. வருங்கால போர்முறைகளில் இது முக்கிய இடம் பெறும். இதற்கு நமது பாரத ராணுவமும் வேகமாக தயாராகி வருகிறது. அவ்வகையில், பாரத ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூ ஸ்பேஸ் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு 100 ராணுவ தரத்திலான டிரோன்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை பாரத ராணுவம் வழங்கியது. இதன் மதிப்பு 15 மில்லியன் டாலர்கள். லடாக் பகுதியில் பாரத சீனா இடையிலான மோதல் தொடங்கியபோது, மத்திய அரசு வழங்கிய அவசரகால கொள்முதல் அதிகாரங்களைப் பயன்படுத்தி ராணுவம் இந்த ஒப்பந்தத்தை வழங்கியது.