தமிழ் வழியில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தில், சமீபத்தில் தமிழக அரசு சிறிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதில், இட ஒதுக்கீடு வழங்க ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும், அரசால், மருத்துவ படிப்பில் இவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இதனால் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயின்ற பல மாணவர்கள் ஆறாம் வகுப்பில் இருந்து தமிழ் வழி கல்விக்கு மாற துவங்கியுள்ளனர். புதியதாக மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பெற்றோரும் தமிழ் வழிக் கல்வியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.