ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்திற்கு சம்மன்!

மணல் கொள்ளை தொடர்பாக, அமலாக்கத் துறை அடுத்தடுத்து நடத்திய சோதனையில், ரகசிய டைரி சிக்கி உள்ளது. அதில் பணப் பரிமாற்றம் தொடர்பான விபரங்கள் இருப்பதால், அது பற்றிய விசாரணைக்கு ஆஜராகும்படி, ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்திற்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் உள்ள அரசியல் புள்ளிகள் இப்போது அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் மணல் குவாரிகள் வாயிலாக, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடப்பதாகவும், அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மணல் கொள்ளை, அதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்தன.

அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ஆடிட்டர் சண்முகராஜா மற்றும் சென்னை சேப்பாக்கம் நீர்வளத் துறை தலைமை அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகள் என, 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆறு மாவட்டங்களில், எட்டு மணல் குவாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 2.33 கோடி ரூபாய் ரொக்கம், 12.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 1 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையின்போது, மணல் கொள்ளைக்கு மூளையாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் என்பவர் இருப்பதும், அரசியல் புள்ளிகள் – மணல் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே இணைப்பு பாலமாக செயல்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, சண்முகம் குறித்த தகவல்களை தீவிரமாக தேடினர். அப்போது, தஞ்சாவூர், திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளுடன், அவர் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், மணல் கொள்ளைக்கு திரைமறைவு பணிகளை செய்து வருவதற்கான ஆதாரங்களும் சிக்கின. அதன் அடிப்படையில், சென்னை தி.நகர், சரவணா தெருவில் உள்ள சண்முகத்தின் வீடு உட்பட, 40 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அடுத்தகட்ட சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்து, ரகசிய டைரி சிக்கியது.

இதில், மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசியல் புள்ளிகள், போலீஸ் அதிகாரிகள், நீர் வளத் துறை அதிகாரிகள் குறித்த விபரங்கள் உள்ளன. அரசியல் புள்ளிகளுக்கு மட்டும் மாதந்தோறும் 50 லட்சம் ரூபாய் மாமூலாக தரப்பட்டுள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் சண்முகத்திற்கும், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆவணங்களை திரட்டி உள்ளனர். இதுபற்றி விசாரிக்க வேண்டி இருப்பதால், சண்முகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மன் கிடைத்த ஏழு நாட்களுக்குள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளனர்.

சண்முகத்துடன் இருக்கும் தொடர்பு வெளியே தெரிந்தால் சிக்கல் என்பதால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் மவுனம் காத்து வருகின்றனர். விரைவில், இவர்களின் வீடுகளில் சோதனை நடக்க இருப்பதாக, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.