மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவித்த பாரதப் பிரஜைகளை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் கங்கா குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கினார். ‘உலகில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் மிகச்சிறந்த, ஒருங்கிணைக்கப்பட்ட, வெற்றிகரமான மீட்புப் பணி இது. உக்ரைனில் உள்ள பாரதத் தூதரகம், உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள பாரதத் தூதரகங்கள், இந்த மீட்புப் பணிகளை மேற்கொண்டன. அவற்றை ஒருங்கிணைத்த மத்திய அரசின் நான்கு அமைச்சர்கள் இதில் ஈடுபட்டோம். பிரதமர் மோடி, தொலைபேசியில் ரஷ்ய அதிபர், உக்ரைன் அதிபர் உள்ளிட்ட பலநாட்டுத் தலைவர்களுடன் பேசி இந்த மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். நம் குடிமக்கள் ஒவ்வொருவரின் நலன் குறித்தும் நாங்கள் கவலைப்பட்டோம். இதுபோன்ற நடவடிக்கைகளால் உக்ரைனில் இருந்து 22,500 பாரத குடிமக்கள் மற்றும் 18 நாடுகளைச் சேர்ந்த 147 வெளிநாட்டினரை மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்து வர முடிந்தது’ என்று கூறினார்.