ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு பிறகு அப்பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. பந்திபோரா மாவட்டத்தில் அரசின் பால்பண்ணைத் துறை உதவியால் அங்கு பல பால் பண்ணைகள் தொடங்கப்பட்டு லாபம் ஈட்டி வருகின்றன. இத்துறையில் பல புதிய ஸ்டார்ட் அப்களும் துவங்கப்பட்டு உள்ளன.
இதில் வெற்றிபெற்ற ஒருவர்தான் தாஹிர் அஹ்மது. பந்திபோராவின் மதார் பகுதியைச் சேர்ந்த தாஹிர் அஹ்மத் 2020ல் கால்நடை பராமரிப்புத் துறையின் உதவியுடன் ஒரு பால் பண்ணையைத் தொடங்கினார். இன்று இந்த இளைஞரிடம் எட்டு பசுக்கள் உள்ளன. அவை தினசரி 90 லிட்டர் பால் கொடுக்கின்றன. தாஹிர் தனது பண்ணையில், உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு, தனது நேரத்தை மிச்சப்படுத்தும் தானியங்கி மாடு பால் கறக்கும் இயந்திரங்கள் போன்ற நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்துள்ளார்.
தாஹிரின் தந்தை, பஷீர் அகமது ராத்தரும், மகனுடன் சேர்ந்து பண்ணையை நிர்வகித்து வருகிறார். அவர்கள் பந்திபோரா முழுவதும் பாலை விநியோகிக்கிறார்கள். தாஹிரின் பால் பண்ணையுடன் இணைந்து பல இளைஞர்களும் இத்தொழிலால் பயனடைந்து வருகின்றனர். தாஹிரின் வெற்றியால் ஊக்கம் பெற்ற சுஹைல் அகமது போன்றோர், பந்திபோராவில் இத்திட்டத்தின் பல பயனாளிகள் தங்கள் சொந்த பால் பண்ணைகளை நிறுவியுள்ளனர். இன்று, மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 37 பயனாளிகள் உள்ளனர். பால் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 2,800 லிட்டராக அதிகரித்துள்ளது. பல வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தாஹிர் அகமதுவின் வெற்றிக் கதையில், அரசின் திட்டங்கள், குறிப்பாக ஒருங்கிணைந்த பால்வள மேம்பாட்டுத் திட்டம் முக்கியப் பங்காற்றியுள்ளது தெரிகிறது.
இதுகுறித்து ஏ.என்.ஐ நிறுவனத்துடன் பேசிய தாஹிர், “இதுதான் தற்போது எனது வாழ்வாதாரம். இதனை நிறுவ எனக்கு உதவிய கால்நடை பராமரிப்புத் துறைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த பால் துறையில் அதிக இளைஞர்கள் சேர வேண்டும், தற்போது கிராமங்கள், நகரங்களில் மாடுகளை வளர்ப்பவர்கள் அதிகம் இல்லை. எனவே அதிக பால் பண்ணைகள் நிறுவப்பட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்தார்.