அவர் பெயர் பிரவீன்குமார். திருப்பூரில் வசிக்கிறார். படித்தது ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் என்ஜினியரிங். என்ஜினீயரிங் முடித்த பிறகு படித்த படிப்பிற்கு வேலை தேடாமல் அப்பா சிறிய அளவில் செய்து வந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலிலேயே தானும் ஈடுபடலாம் என்று முடிவு செய்தார்.
அப்பா தொழிலை விரிவு படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தார். டெக்ஸ்டைல்ஸ் தொழில் பொதுச் சந்தையில் நல்ல லாபத்துடன் சென்று கொண்டிருந்தாலும் இவருடைய அப்பா முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். பிரவீன்குமார் தொழிலுக்கு வந்தவுடன் அப்பாவின் சிக்கல்களை ஆராய ஆரம்பித்தார்.
டெக்ஸ்டைல் தொழிலுக்கு இரண்டு பெரிய சவால்கள் காத்திருந்தன. ஒன்று மொழி. திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் ஈடுபட இந்தி தெரிந்திருப்பது மிகவும் அவசியமாக இருந்தது. வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் திருப்பூரில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் சரளமாக உரையாடுவதற்கு இந்தி முதல் தேவையாக இருந்தது.
இதை உணர்ந்த பிரவீன் குமார் உடனடியாக இந்தி கற்றுக் கொள்ள முடிவு செய்தார். சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கி படிக்கவில்லை. சரளமாக உரையாட வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக தினசரி பல மணி நேரங்களை ஒதுக்கினார். இந்தி பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். ஆறு மாதங்களில் மேடை போட்டு பேசும் அளவுக்கு இந்தியை கற்றுக் கொண்டிருந்தார். வடமாநில வியாபாரிகள் உடன் சரளமாக உரையாட முடிந்தது வியாபாரம் பெருகியது.
திருப்பூரில் ஹிந்தி பேச தெரிந்தவர்கள் எல்லாம் இவர் அளவுக்கு வியாபாரம் செய்தார்கள். அவர்களையும் தாண்டி சம்பாதிக்க வேண்டும் என்பது இரண்டாவது சவால். ஜவுளித்தொழிலில் மும்பையில் அறிமுகமாகிற ஒரு புதிய ஃபேஷன் தமிழகத்திற்கு வருவதற்கு மூன்று மாதங்கள் ஆகிறது. மும்பையில் ஒரு பேஷன் முடியும் போதுதான் தமிழகத்தில் அது தொடங்குகிறது. இந்த கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்று கணக்குப் போட்டார் பிரவீன்குமார்.
மும்பையில் அறிமுகமான அடுத்த நிமிடமே அதை தமிழகத்தில் கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தார். அதற்கான செயல்களில் உடனடியாக ஈடுபட ஆரம்பித்தார். மும்பையில் பல வியாபாரிகளை நண்பர்களாக வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் அடுத்தடுத்து அறிமுகமாகப்போகிற ஃபேஷன் விலை தெரிந்து கொண்டு உடனடியாக அதை திருப்பூரில் அறிமுகப்படுத்தினார். நவீன தொழில்நுட்பம் இவருக்கு உதவியாக இருந்தது.
மொழியை பெற்றுக் கொண்டதும் புது வழியை கற்றுக்கொண்டதும் தான் தொழிலில் சிகரம் தொட காரணம் என்கிறார் பிரவீன்குமார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு பிரவீன்குமார் ஓர் உதாரணம்.