பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடி ஏற்றப்பட்டது, சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.பள்ளி வளாகத்திற்குள் எஸ்.டி.பி.ஐ கொடியை சிலர் ஏற்றிய மற்றும், சில குழந்தைகள் அதற்கு வணக்கம் செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து பேசிய பா.ஜ.க தலைவர் ஆர்.பி.சிங், “அரசுப் பள்ளி வளாகத்தில் எஸ்.டி.பி.ஐ கொடியை ஏற்றுவது ஆபத்தான போக்கு. இதற்கு காரணமானவர்கள் மீது பீகார் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திடமும் விசாரிக்க வேண்டும்” என்றார். காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ், “இந்த சம்பவம் குறித்து நிர்வாகம் முழுமையாக விசாரிக்க வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும். நாலந்தா பள்ளி வளாகத்தில் ஏஸ்.டி.பி.ஐ கொடியை ஏற்றிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். அம்மாவட்ட அதிகாரி, குமார் அனுராக், இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், வீடியோ, புகைப்படத்தின் தேதி மற்றும் நேரம் தெரியவில்லை. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார். எஸ்.டி.பி.ஐ 2009ல் நிறுவப்பட்டது. இது சர்ச்சைக்குரிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அரசியல் கிளை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஜூலை 2022 ல், பீகார் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவவை கூட்டு நடவடிக்கையாக பாட்னாவின் சப்ஜி பாக் பகுதியில் பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியது. தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த கூட்டு சோதனை நடத்தப்பட்டது. பாரதத்தை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான பி.எப்.ஐ அமைப்பின் ‘மிஷன் 2047’ உட்பட பல ஆவணங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.