கொரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் நோக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அடுத்த 4 மாதங்களுக்கு மட்டும் திறக்க சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், ஆலையை தாங்கள் தான் நடத்துவோம் என்ற பிடிவாதத்துடன் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆக்ஸிஜனுக்காக மட்டுமே ஆலையை இயக்க வேண்டும் என்றும் உற்பத்தியில் தமிழகத்துக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கிய பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யத் தயார் என்று வேதாந்தா நிறுவனம் கூறியிருந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. ”தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடே இல்லை” என்று வாதிட்டார் வைகோ. “1,000 உயிர்கள் போனாலும் கவலையில்லை, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” என்று ஆவேசப்பட்டார் திருமாவளவன். கொரோனா தொற்று பரவி வரும் இந்தச் சூழலிலும் அரசியல் செய்கிறார்களே என்ற பொதுமக்களின் கோபம் சமூக வலைதளங்களில் தெரிந்தது.
இதனிடையே, இந்தியாவுக்கு ஆக்ஸிஜனையும் கொரோனா தடுப்பூசி மூலப் பொருட்களையும் அளிக்க சீனா தானாக முன்வந்தது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கிவிடுவார்களோ என்ற பதற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய வரையில் தாமிர உற்பத்தியில் இந்தியா நிகர ஏற்றுமதியாளராக இருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்குப் பின்னால் நமது தாமிரத் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இதனால், பெரிதும் ஆதாயமடைந்து வருவது சீனாதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்கு சீனா மறைமுகமாக உதவி செய்து வந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை சீனா இதுவரை மறுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இத்தகைய சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காகத் திறக்க எதிர்க்கட்சிகள் திடீரென ஒப்புக்கொண்டது வியப்புக்குரியதே. இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிய தமிழகம் ஆவலாக இருக்கிறது. எது எப்படியோ, தற்போதைய நிலையில் தமிழகத்துக்கும் ஒட்டுமொத்த பாரதத்துக்கும் கொரோனா சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் தங்கு தடையில்லாமல் கிடைத்தால் சரிதான்.