ஸ்டார்ட் அப் கடன்

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக மத்திய பட்ஜெட்டின், நிதித்துறை ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘கொரோனா காலத்தில் 90 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ரூ. 2.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பல்வேறு சீர்திருத்தங்கள், தாராளமயமாக்கல் செய்துள்ளது. இச்சூழலில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சிக்கு, தாராளமாக கடன் வழங்க வேண்டும். வங்கி, வங்கி சாரா நிதித்துறையின், பழைய கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன், வெளிப்படைத்தன்மை இன்றி வங்கிக் கடன் கொடுக்கப்பட்டது. தற்போது, கடன் தருவதில் ஒளிவுமறைவுக்கு இடமில்லை. வங்கிகள், வாராக் கடனை மறைத்த காலம் மலையேறி விட்டது. இப்போது, ஒவ்வொரு நாளும் வாராக் கடன் நிலவரம் குறித்து, வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு தெரிவிப்பது கட்டாயம். உண்மையான நோக்கத்துடன் நிதித் துறையினர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும், நான் துணை நிற்பேன்’ என கூறினார்.