மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் (சி.இ.எல்) நிறுவனம், ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி பஞ்சாயத்தில் 20 நாட்களில் 500 கிலோவாட் சோலார் ஆலையை நிறுவி சாதனை படைத்துள்ளது. 2.75 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை முடிக்க 25 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் உழைத்தது. 6,408 சதுர மீட்டரில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலை, நாடு தழுவிய தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவை தொடங்குவதற்கு ஜம்மு காஷ்மீர் வரும் பிரதமரின் வருகையையொட்டி நிறுவப்பட்டு உள்ளது. இது அந்த கிராமத்தில் உள்ள 340 வீடுகளுக்கு சுற்றுசூழலை மாசுப்படுத்தாத பசுமை மின்சாரத்தை வழங்கும். இது மத்திய அரசின் “கிராம் ஊர்ஜா ஸ்வராஜ் திட்டத்தின்” கீழ் முதல் ‘கார்பன் நியூட்ரல் பஞ்சாயத்து’ ஆகும். இந்த சோலார் ஆலையின் வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை பார்வையிட்ட மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சாதனை புரிந்த சி.இ.எல் பொறியாளர்கள், விஞ்ஞானிகளை பாராட்டினார்.