பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக சார்பில், பாரத வரலாற்றில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு பெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பா.ஜ.க ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவராக முன்மொழியப்பட்ட சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பாரூக் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், நேற்றுவரை பா.ஜ.கவில் இருந்த உயர்ஜாதி இனத்தவரான யஷ்வந்த் சின்ஹாவைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவலநிலை எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று இதுவரை பேசிய தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ் கட்சியினர் யாரை ஆதரிக்கப் போகின்றனர்? பழங்குடி இனத்தைச் சேர்ந்த பி.ஏ.சங்மாவை பா.ஜ.க நிறுத்தியபோது வைதீகரான பிரணாப் முகர்ஜியை நிறுத்திய காங்கிரஸ் கட்சி பழங்குடியினத்தவரான சங்மாவைத் தோற்கடித்தது. இம்முறை பா.ஜ.கவின் பழங்குடியின வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் அவரை ஒருமனதாக தேர்வு செய்து, போட்டியின்றி வெற்றி பெற துணை நிற்க வேண்டாமா? கிறிஸ்தவரை முன்னிறுத்தினால்தான் ஆதரிப்பேன் என்ற திருமாவளவனின் நிலை மாறிவிட்டதா? ஜனாதிபதியாக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து உயர்ஜாதி வகுப்பினரை போட்டியில் எதிராக நிறுத்தும் இவர்களின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில்தான் இருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் இருப்பது சமூகநீதியா சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம். உயர் ஜாதி வேட்பாளரை ஆதரித்து, பட்டியலினத்தின் மலையகமகளை மறுக்கும் திமுகவும், திருமாவும், காங்கிரசும் இனி சமூக நீதிக்கும் புதிய மாடல் உருவாக்கப்போகிறார்கள் போலும். இவர்களா சமூக நீதியின் காப்பாளர்கள்? தி.மு.கவும், காங்கிரசும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மட்டுமே ஆதரவு தருவார்கள். மற்றவர்கள் எப்போதும் போல தாத்தா காலத்தில் இருந்து வழிவழியாக போஸ்டர் ஒட்டுவதற்கும், தலைவர் வாழ்க என கோஷம் போடவும் மட்டுமே இங்கு அனுமதி உண்டு” என்று கூறியுள்ளார்.