‘காவல் துறை உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு குறித்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் காலியாக உள்ள, 621 காவல் உதவி ஆய்வாளர் பணிகளில், 123 பணியிடங்கள், துறையில் பணிபுரிபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன; அதற்கான எழுத்து தேர்வு, ஆக., 26, 27ல் நடந்தது. காவல் துறையில் பணிபுரியும், 7,000 பேர், அந்த தேர்வில் பங்கேற்று, தேர்வு முடிவுக்கு காத்திருந்தனர். தற்போது வந்துள்ள தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. அடுத்தடுத்த தேர்வு எண் உடையவர்கள், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதாக, தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே தேர்வு மையத்தில், அதிக தேர்ச்சி பெறும் வழக்கமான அரசு தேர்வு முறைகேடுகள், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறை சார்ந்த எழுத்து தேர்விலும் வந்திருப்பது, மிகுந்த கண்டனத்திற்கு உரியது. உடனே, இந்த முறைகேடு குறித்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய காவல் துறை சகோதரர்கள் மட்டுமே, உதவி ஆய்வாளர் பணிகளில் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.