தோள் கொடுக்கும் ஹிந்து கோயில்கள்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் பாரதம் போராடுகையில், நாடு முழுவதும் பல கோயில்கள் இந்த போராட்டத்தில் அரசுக்கும் மக்களுக்கும் உதவ மீண்டும் முன்வந்துள்ளன. குஜராத், வதோதராவில் உள்ள சுவாமிநாராயண் கோயில் அதன் ‘யக்ஞபுருஷ் சபக்ருஹ’ என்ற இடத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றியுள்ளது. இங்கு, 500 படுக்கைகள், ஆக்ஸிஜன், ஐ.சி.யூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா, பூரி ஜகந்நாதர் ஆலய நிர்வாகம் தனது நிலாச்சல் பக்த நிவாஸை 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது தவிர, ரூ. 1.51 கோடியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கிறது. மும்பையின் கண்டிவாலியில் உள்ள பவன்தாம் கோயில் தனது நான்கு மாடி கட்டிடத்தை மீண்டும் 100 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றியுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளித்து வருகிறது. குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சாரங்பூர் ஹனுமான் ஆலயம், அதன் தர்மசாலாவை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றியுள்ளது. கடந்த ஆண்டும், இதே போன்ற கொரோனா தொற்றுநோயின்போது பல ஹிந்து கோயில்கள் பல கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தன. தேவைப்படுபவர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்கின. ஹிந்து கோயில்கள், இது போன்ற ஒவ்வொரு நெருக்கடியின் போதும் தேசத்திற்கு தோள் கொடுத்து காக்கின்றன.