சேவையே சிந்தனை

தேசத்திற்கு சோதனை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் மக்களுக்கு முதலில் ஓடி வந்து உதவுவதும் அனைத்தும் சரியாகும்வரை மக்களுக்கு தோள் கொடுத்து உதவி கடைசியாக அங்கிருந்து வெளியேறும் இயக்கமும் ஆர்.எஸ்.எஸ் மட்டும்

தான். தற்போதுள்ள கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின்போதும் வழக்கம் போலவே எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஓடோடிச் சென்று மக்களுக்கு உதவி வருகின்றன ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள்.

கொரோனாவின் முதல் அலைகளைப் போலவே, இரண்டாவது அலையிலும், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும்  ஏழைகளுக்கும், சேவா பாரதி, பல தொண்டு அமைப்புகள், நிறுவனங்கள் மூலம் உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நெருக்கடியான இந்த காலகட்டத்தில், ஸ்வயம்சேவர்கள் தங்கள் பகுதிகளில் அந்தந்த  பிராந்தியங்களின் தேவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாக பல வகையான சேவை பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுதல், கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைத்தல், அரசு நடத்தும் கோவிட் பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உதவிகள் வழங்குதல், உதவிக்கான ஹெல்ப்லைன் எண், ஆன்லைன் மருத்துவ ஆலோசனை, ரத்த தானம், பிளாஸ்மா நன்கொடை, இறுதிச் சடங்குகளுக்கு உதவுதல், சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ உதவிகள், மருந்து விநியோகம், மருத்துவ ஆலோசனை, மனநல ஆலோசனை வழங்குதல், ஆக்ஸிஜன் வழங்கல், ஆம்புலன்ஸ் சேவை, தேவையானவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது, முக்கவசங்கள், கபசுரக் குடிநீர் வினியோகம், தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் என பல்வேறு சமுதாயப் பணிகளை தேசம் முழுவதும் இடையறாது செய்து வருகின்றனர்.

தேசம் முழுவதும் சுமார் 3,800 இடங்களில் ஹெல்ப்லைன் மையங்கள், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்வதிலும், உதவி வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர். 7500 க்கும் மேற்பட்ட  இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகின்றனர். நாடு முழுவதும் 287 இடங்களில் தனிமைப்படுத்தும் மையங்களை இயக்கி வருகின்றனர். இங்கு சுமார் 9,800 படுக்கைகள் உள்ளன. 7,476 படுக்கைகளுடன் கூடிய கோவிட் பராமரிப்பு மையங்கள் 118 நகரங்களில் நடத்தப்படுகின்றன, அவற்றில் 2,285 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் செயல்படுகின்றன. இந்த மையங்களில்  நோயாளிகளை கவனிக்க 5,100 க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் பணிபுரிகின்றனர்.

இதனைத்தவிர, அரசு நிர்வகிக்கும் கோவிட் பராமரிப்பு மையங்களுக்கும் பல்வேறு உதவிகளை ஸ்வயம்சேவகர்கள் செய்து வருகின்றனர். நாட்டின் 762 நகரங்களில் இயங்கும் 819 அரசு நடத்தும் கோவிட் பராமரிப்பு மையங்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவிகள் செய்து வருகின்றனர். சுமார் 1,256 இடங்களில் ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து 44 ஆயிரம் யூனிட் ரத்தத்தை தானம் பெற்று வழங்கியுள்ளனர். தேசம் முழுவதும் 1,400 இடங்களில் இயங்கும் மருத்துவ ஹெல்ப்லைன்கள் மூலம் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்த மையங்களில் பயிற்சி பெற்ற 4,445 மருத்துவர்கள் சேவைகளை வழங்கிவருகின்றனர். இதனைத்தவிர, நோயாளிகளை அழைத்து செல்ல வாகனங்கள், இறுதிச்சடங்கு உதவிகள், உணவு  வழங்கல் என அவர்கள் தங்களால் முடிந்த மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.