செங்கோல் ஒரு பெருமித நிகழ்வு

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக சென்னையில், ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு தமிழகத்தை சேர்ந்த 20 ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது. ஆட்சி மாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் நடைமுறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. செங்கோலை தயாரித்த பெரியோர்களை பிரதமர் மோடி கௌரவிப்பார். இதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் மரியாதை செய்யப்பட உள்ளது.

செங்கோல் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இணையதளத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். 1947 ஆகஸ்ட் 14ல் ஆதினங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைத்த செங்கோல், பிறகு பிரயாகராஜ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த விஷயம் பலருக்கும் தெரியவில்லை. அதை தேட வேண்டியதாகிவிட்டது. 1978ல் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகா பெரியவர், செங்கோல் குறித்து பேசிய போது, மக்கள் கவனத்திற்கு வந்தது. ஊடகங்களிலும் அதிகம் பேசப்பட்டது. 2021 பிப்ரவரி மாதத்தில் வந்த இதுகுறித்த கட்டுரை, பிரதமர் மோடிக்கு மொழி பெயர்த்து அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்து சிலரை பிரதமர் அணுகினார். அவர்கள் தேடிய போது, செங்கோல் பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது.

செங்கோல் நிறுவவதில் அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் பெருமிதமான நிகழ்ச்சி இது. அடுத்த 100 ஆண்டுகளுக்கான பெருமைக்குரிய சின்னமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் திகழும். இது ஜனநாயகத்தின் கோயில். மக்கள் பிரச்னைகள் பற்றி பேசப்போகிற சபையை நாம் புறக்கணிக்க போகிறோமா? 2014ல் எம்.பியாக வெற்றி பெற்றதும் பிரதமர் மோடி, நாடாளுமன்ற படிக்கட்டில் சிரம் தாழ்த்தி வணங்கி உள்ளே சென்றார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பது நல்லதல்ல என தாழ்மையான கருத்து. மக்களுக்காக, எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்” என கூறினார். இந்த சந்திப்பின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர்கள் தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன், மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தனர்.