மகாராஷ்ர மாநிலம் நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தலைமை அலுவலகத்தின் பாதுகாப்பை பொறுப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்) ஏற்றுக் கொண்டுள்ளது. சங்கத்தின் தலைமையகத்திற்கு சுமார் 15 ஆண்டுகளாக பாதுகாப்பை வழங்கிவந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை மற்றும் நாக்பூர் காவல்துறைக்கு பதிலாக சி.ஐ.எஸ்.எப் இந்த பொறுப்பை ஏற்றுள்ளது. ஒரு அதிகாரி உட்பட சுமார் 150 வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். இந்த குழுவுக்கு துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தலைமை தாங்குவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தலைவர் மோகன் பாகவத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது என்பதும் கடந்த ஜூன் 2006ல், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதும் நினைவு கூரத்தக்கது.