”சுதந்திர போராட்டத்தின் முழு வரலாறு, பள்ளி, கல்லுாரிகளில் கற்பிக்கப்படவில்லை,” என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., தேசத்திற்காக பணியாற்றி வருகிறது. சின்மயா மிஷன், தெய்வீகப் பணியில் ஈடுபட்டுள்ளது. தேச பக்தியும், தெய்வ பக்தியும் ஒன்றே. சுவாமி சின்மயானந்தருக்கும், ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த குருஜி கோல்வால்கருக்கும் ஒருமித்த சிந்தனை இருந்தது. சுவாமி சின்மயானந்தர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு பெரும் ஆதரவு அளித்தவர். சுவாமி சின்மயானந்தர் பகவத் கீதையை, சாதாரண மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுச் சென்றார். நாட்டு விடுதலைக்காக போராடிய பலர், கையில் பகவத் கீதையுடன் துாக்கு மேடையேறியது, நம் வரலாறு. சுதந்திர போராட்டத்தின் முழுமையான வரலாறு, பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்கப்படவில்லை.
‘தேசம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல; தர்மம், கலாசாரத்தை உள்ளடக்கியது தான் தேசம். சனாதன தர்மம்தான் தேசியம்’ என்றார், ஸ்ரீஅரவிந்தர். ஆனால், சனாதன தர்மத்தை பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இது அறியாமை அல்ல; திட்டமிட்ட சதி.இந்தியாவை வலுப்படுத்த வேண்டும். இந்தியர்களிடம் தேச பக்தியை வளர்த்து, நாட்டை வலுப்படுத்த வேண்டும். நாடு எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டது. இப்போது நாடு எழுச்சி பெற்று வருகிறது.
தேசம்தான் நமக்கு முதன்மையானது. ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இந்த மண்ணுடன் நீண்ட தொடர்பு உள்ளது. அனைத்து மாநிலங்களிலுமே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ராமர், கிருஷ்ணர் என பெயர் சூட்டுகின்றனர். ராமர், தெற்கில் இருந்து வடக்கையும்; கிருஷ்ணர், மேற்கில் இருந்து கிழக்கையும் இணைக்கின்றனர். சிவனும், சக்தியும் நாடு முழுதும் இருக்கின்றனர்.