இந்தோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “கனரக டிரக்குகள் மற்றும் பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கு வசதியாக சூரிய சக்தி மற்றும் காற்றாலையால் இயங்கும் மின்சார நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பு பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும், புதிய தொழில்களை உருவாக்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும். மத்திய அரசு 26 பசுமைவழி விரைவுச் சாலைகளை உருவாக்கி வருகிறது. பிரதம மந்திரி கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம், இத்திட்டங்களுக்கு விரைவான அனுமதி கிடைக்கும். தளவாடச் செலவுகள் குறையும். பாரதத்தின் சாலை திட்டங்களில் முதலீடு செய்ய அமெரிக்க முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 3 கோடி மரங்கள் நடப்படும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் இதுவரை 27,000 மரங்களை நடவு செய்துள்ளோம். மரம் வெட்டுவதற்கும், மரம் வளர்ப்பதற்கும் ‘மர வங்கி’ என்ற புதிய கொள்கையை அரசு உருவாக்கி வருகிறது. நாடு முழுதும் சுங்கச் சாவடிகளில், ‘பாஸ்டேக்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வருவாய், ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 2018ல் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பு நேரம், எட்டு நிமிடங்களாக இருந்தது. பாஸ்டேக் முறை வந்த பின்பு அது 47 வினாடிகளாக குறைந்துள்ளது. வருங்காலத்தில், ஜி.பி.எஸ்., எனப்படும் செயற்கைக்கோள் வாயிலாக, வாகனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது, வாகனங்களின் பதிவு எண்களை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பை வலுப்படுத்த 2024ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் 15,000 கி.மீ தொலைவிற்கு அதிநவீன போக்குவரத்து அமைப்பை செயல்படுத்த அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது” என தெரிவித்தார்.