கொரோனா சிகிச்சைக்காக, தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட ஏழு இடங்களில் ரெம்டெசிவர் மருந்துகள் விற்கப்படுகின்றன. ஒரு சில அரசு மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், ஏஜெண்டுகள் என பலரும் இதில் பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். பல போலி ரெம்டெசிவர் மருந்துகளும் கூட சந்தையில் விற்கப்படுகின்றன. சிலர் இதில் சிக்கியும் வருகின்றனர். இதனைத் தடுக்க ‘பொதுமக்களிடம் மருந்து விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். உண்மையாகவே மருந்து தேவைப்படும் நோயாளிகளின் முழு சிகிச்சை விவரங்கள், நோயாளியின் கட்டண ரசீது போன்றவற்றை தனியார் மருத்துவமனைகள் ஆன்லைனில், மருத்துவ சேவை கழகத்திற்கு அனுப்பி மருந்தை பெற வேண்டும் என்ற நடைமுறையை அரசு அமல்படுத்தினால் 90 சதவீத முறைகேடுகளை தவிர்க்கலாம். ஏமாற்றுவதற்காக பொய்யான கட்டண ரசீதுகளை தந்தால் அந்த குறிப்பிட்ட மருத்துவமனை வருமானவரி பிரச்னையில் சிக்க நேரிடும்’ என பல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ‘மக்களின் உயிரை காக்கும் ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இது குறித்தும் சிந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.