கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, நிவாரணம் வழங்குகின்ற வகையில், ‘விவாத் சே விஸ்வாஸ் 1’ என்ற திட்டத்தை, நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மத்திய அரசு அமைச்சகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தன. அவற்றை கொரோனா காரணமாக நிறைவேற்ற முடியாமல் போயிருந்தால், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செக்யூரிட்டி தொகையில் 95 சதவீதம் இத்திட்டத்தின் படி, நிவாரணமாக திருப்பித் தரப்படும்.
இந்நிலையில், விவாத் சே விஸ்வாஸ் 1 திட்டத்தின் கீழ் 10,000 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமைகோரல்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, இந்நிறுவனங்களுக்கு 256 கோடி ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் நிதிச் சுமையை குறைப்பதும், வளர்ச்சியை மேம்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், மத்திய நிதி அமைச்சகத்தால், நடப்பாண்டு ஏப்ரல் 17ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.