சென்னையை சேர்ந்த ஆசிரியரும், மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளருமான பிரகாஷ் வைத்தியநாதன் என்பவர் பள்ளி குழந்தைகளுக்காக வடிவமைத்த, ஸ்ரீராமர் குறித்த மின் புத்தகம், அமேசான் கிண்டில் பிளாட்பாரத்தில் கிடைக்கிறது. கிரேடு 1 முதல் 5 வரையிலான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த புத்தகம் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து பிரகாஷ் கூறுகையில், ‘ஸ்ரீ ராமர் என்ற பெயரின் அர்த்தம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்ற கேள்வியை நான் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களிடம் முன்வைத்தபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பொருள் யாருக்கும் தெரியவில்லை என்று கூறினர். இதுதான் என்னுடைய இந்த முயற்சிக்கு துவக்கப்புள்ளியாக இருந்தது. ஒரு ஆசிரியராக, குழந்தைகளுக்கு ஆன்மீகத்தில் ஆர்வமூட்ட ஆக்கபூர்வமான வழிகள் தேவை என்று நான் உறுதியாக சொல்வேன். ராமரின் பெயர்களைக் கண்டறிய குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் சிறிய அளவில் குறியீடு, எண்கணிதத் தாள்கள்’ என்று மின் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் 30 தாள்கள் இருக்கும். எனவே குழந்தைகள் ராமரின் 30 வெவ்வேறு பெயர்களையும், அர்த்தங்களையும் கற்றுக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்தார்.