காகதீயர்களின் அற்புதமான சிற்பக்கலை சிறப்பிற்கும் கம்பீரமான கட்டிடக்கலைக்கும் சின்னமாக 800 ஆண்டுகால நீண்டவரலாற்றைக் கொண்ட புகழ்பெற்ற ராமப்பா கோயிலை உலகம் இப்போது வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. தெலங்கானா, மாநிலம், முலுகு மாவட்டம், வெங்கடபுரம் மண்டலத்தின் பாலம்பேட்டாவில் உள்ள ராமப்பா கோயிலுக்கு இந்த அரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
ராமப்பா கோயிலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனஸ்கோ) உலக பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளது. 2019ல் இருந்து இந்த ஆலயம் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கும் நிகழ்வில், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளைக் காண முடிந்தது. நாமிநேஷனில் ராமப்பா கோயிலைச் சேர்ப்பதற்கு நார்வே எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் ராமப்பா உடனடியாக பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று ரஷ்யா முயற்சித்தது. மொத்தமுள்ள 24 நாடுகளில் 17 நாடுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தன. இந்தியா ராஜதந்திரத்தோடு பிற நாடுகளின் ஆதரவைச் சேகரித்தது. கோயிலின் தனித்துவத்தை விவரித்துக்கூறிய பிரதிநிதிகளை பிரதமர்மோடி பாராட்டினார். தெலங்கானா மாநிலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆனால்,இந்த பெருமை எளிதில் கிடைத்துவிடவில்லை. கடுமையான முயற்சிக்குப் பிறகே இந்த அங்கீகாரத்தைப் பெற முடிந்தது. இத்தகைய பெருமையைப் பெற சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு முதலில் ஒரு பட்டியலை அனுப்ப வேண்டும். அதன் பிறகு ஆலோசனைக் குழு ஆராய்ந்து பரிசீலனை செய்யும். இறுதி பட்டியல், உலக பாரம்பரியக் குழுவுக்கு செல்லும். பத்து அம்சங்களில் தேர்ச்சி பெற்றால்தான் உலக பாரம்பரியச் சின்னத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
ராமப்பாவின் சிறப்புகள் சில
மணலால் ஆன அஸ்திவாரம்; மிதக்கும் செங்கற்கள்; கல்லில் மீட்டினால் நாதம் எழும்; கருங்கல்லில் நேர்த்தியான கலை வடிவங்கள்; ஊசி நுழையும் துளையில் நுட்பமான சிற்பங்கள்; வெவ்வேறு வடிவங்களில் நூற்றுக்கணக்கான யானை பொம்மைகள்; வித்தியாசமாகத் தோன்றும் சிற்பக் கலை வைபவங்கள்; உலகைத் திகைப்பூட்டும் பொறியியல் தொழில்நுட்பம். இதுபோன்ற அம்சங்களால் நம் ராமப்பா கட்டிடம் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது!
தெலுங்கு மாநிலங்களில் இத்தகைய அங்கீகாரம் பெற்ற முதல் கட்டிடம் ராமப்பா. யுனஸ்கோ உலக பாரம்பரிய தலங்களைத் தேர்ந்தெடுப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதும் அந்தப் பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதே. உலக பாரம்பரிய சின்னத்தை அங்கீகரிப்பதன் மூலம் ராமப்பா கோயில் புதிய சிறப்பைப்பெறுகிறது. சிதிலமடைந்து கொண்டிருக்கும் அற்புதமான சிற்ப புதையல்களைப் பாதுகாக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். கோயிலின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி அளிக்கும். மேலும் இப்பகுதி சுற்றுலாத் துறையால் அபிவிருத்தி செய்யப்படும்.
ஏற்கனவே நாட்டின்பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் இக்கோயில் ஈர்த்து வருகிறது. கோயிலின் மேம்பாட்டிற்காகவும் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காகவும் மத்திய அரசு பெரிய அளவில் பணத்தை ஒதுக்க முடியும். இது கோயிலுக்கும் உள்நாட்டிற்கும் வணிக மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும். இந்தச் சிறப்பான அங்கீகாரம் பெற்றதற்காக பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அற்புதமான கோயிலான ராமப்பாவுக்குச் செல்லுங்கள்! அருமை! அனைவருக்கும் வாழ்த்துகள்! குறிப்பாக ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்த தெலங்கானா மக்களை வாழ்த்துகிறேன். ராமப்பா கோயில் காகதீயர்களின் கம்பீரமான கட்டடக்கலைத் திறனின் சிறந்த அடையாளம். அற்புதமான இந்த கோயிலுக்குச் செல்லுங்கள். கோவில் சௌந்தரியத்தை நேரடியாகப் பார்த்து அந்த உணர்வை அனுபவியுங்கள்!” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா முதர்வர் கே.சந்திரசேகர ராவ் தனது வாழ்த்தில், “ராமப்பாவை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிப்பதில் ஒத்துழைப்பு அளித்த யுனஸ்கோ உறுப்பு நாடுகளுக்கும், மத்திய அரசு அளித்த ஆதரவுக்கும் நன்றி. ராமப்பா கோயில் தெலங்கானாவில் காகதியர்களால் உருவாக்கப்பட்ட ஆன்மிக, கலாசார புதையல். இது நாட்டில் தனித்துவமானது. தெலங்கானா வின் ஆன்மிக கலாசாரத்திற்கு முன்னுரிமை அளித்து மாநில அரசு செயல்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
-ராஜி ரகுநாதன்