ராமபிரான் என்றதுமே திராவிட இயக் கத்தார் ‘சாமியாட’த் தொடங்கி விடுவார்கள். “வடநாட்டு ஆரிய இராமன், தென்னாட்டு திராவிட ராவணனை வதைத்ததைப் போற்று
வதுதான் ராமாயணம். வடமொழியில் வால்மீகி எழுதியதை கம்பன் தமிழில் மொழி பெயர்த்து ஆரிய மாயையைப் புகுத்தி விட்டான்” என்றெல்லாம் ஓலமிடுவார்கள். ஆனால் இந்த சத்தத்தால் எழுகின்ற சஞ்சலம், சந்தேகம் போன்றவை, சங்க இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கினால் சப்தநாடியும் ஒடுங்கிவிடும்.
கம்பர் தனியொரு இராம காவியத்தை இயற்றியதற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சங்க இலக்கியங்களான அகநானூற்றிலும் புறநானூற்றிலும் ராமபிரான் போற்றப்பட்டுள்ளார். ராமரின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், இவை இரண்டிலுமே கவித்துவமாக மேற்கோள்கள் காட்டப்பட்டு உள்ளன. முதலில், அகநானூற்றுச் சான்றைப் பார்ப்போம். அகநானூற்றின் 70-வது பாடல், மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் என்ற புலவர் நெய்தல் திணையில் பாடிய பாடலாகும். இப்பாடலில், இலங்கையில் வாழ்ந்த அரக்கன் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்பதற்காக ராமபிரான் தனுஷ்கோடி வழியே சென்றார் என்ற வரலாற்றுத் தகவல் பதிவிடப் பட்டுள்ளது.
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை…. ……
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே….
இந்தப் பாடல் வரிகளுக்கான பொருள்: “தலைவியே, உனக்குத் திருமணம் நடைபெறு
வதற்கு முன்பு, உனக்கும் உனது காதலனாகிய தலைவனுக்கும் இடையே இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் பலரிடமும் கிசுகிசு வம்புக் கதை பேசித் திரிந்தனர். ஆனால், இப்போது உங்கள் இருவரின் திருமணம் நடந்து முடிந்த பின்னரோ நிலைமை மாறி
விட்டது. வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் * குலத்துப் பாண்டிய மன்னர்
களுக்குச் சொந்தமான மிகப் பழமை
யான கோடி (தனுஷ்கோடி) என்ற இடத்
திலே கடல் முழங்குகின்ற துறைமுகத்திலே, வெற்றியன்றி வேறெதுவும் அறியாத இராமன், தனது இலங்கைப் படையெடுப்பு குறித்து யோசனை செய்தபோது, அங்கே ஆலமரத்தில் தங்கியிருந்து ஒலியெழுப்பி வந்த பறவைகளை ஒரு சொல்லால் அடக்கி அமைதியாக இருக்கச் செய்ததைப் போல, இப்போது ஊர் வாய் அடங்கிவிட்டது.” என்ன அருமையான புகழாரம் “வெல்போர் இராமன்”!
(* கௌரவர்கள், பாண்டவர்கள் இருவருமே குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான். குரு வம்சத்தவர் என்பதையே கௌரவர் என்ற வார்த்தை குறிக்கிறது. இதைத்தான் பழந்தமிழர்கள் கௌரியர் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பாண்டியர்களும் குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்ற வரலாற்றுச் செய்தியும் இதில் அடங்கியுள்ளது.) இப்போது புறநானூற்றைப் பார்ப்போம். புறநானூற்றின் 378-வது பாடல், சோழன் இளஞ்சேட்சென்னி வழங்கிய பரிசுகளால் மகிழ்ந்த புலவர் ஊன்பொதி பசுங்குடையார், அம்மன்னனைப் புகழ்ந்து பாடியதாகும்.
இலம்பா(டு) இழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்(கு)அமை மரபின மிடற்றுயாக் குநரும்
மிடற்(று)அமை மரபின அரைக்குயாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிநதாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
இப்பாடலின் பொருள்: “சோழன் வழங்கிய பரிசுப் பொருட்களால் வறுமையை இழந்த எனது சுற்றத்தார், தலைகால் புரியாமல், விரலில் அணிய வேண்டிய நகைகளை காதுகளிலும், காதுகளில் அணிய வேண்டியவற்றை விரல்களிலும், இடுப்பில் அணிய வேண்டியதை கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியதை இடுப்பிலும் அணிந்து கொண்டார்கள். இது எப்படி இருந்தது தெரியுமா? பெரும் வலிமையை உடைய ராமபிரானின் மனைவியான சீதையை, வன்மம் கொண்ட அரக்கனான ராவணன் விமானத்திலே கவர்ந்து சென்றபோது, தனக்கு ஏற்பட்ட துயர நிலையைத் தெரியப்படுத்துவதற்காக அவர், தான் அணிந்திருந்த நகைகளை நிலத்திலே வீசி எறிந்தார் அல்லவா? அப்போது, நிலத்தில் வீசப்பட்ட அந்த அணிகலன்களை அங்கே இருந்த குரங்குக் கூட்டமானது, எந்த நகைகளை எப்படி அணிந்துகொள்வது என்று தெரியாமல் உடல் பாகங்களில் மாற்றி மாற்றி அணிந்துகொண்டதைப் போல எனது சுற்றத்தாரின் நடவடிக்கை இருந்தது” என்கிறார் புலவர். ராமபிரானின் வரலாறு, கம்பருக்கு முன்பே தமிழகத்தில் வேரூன்றிய ஒன்று என்பதற்கு இந்த இரு பாடல்களும் முக்கியச் சான்றுகள். மேலும், அருங்குணங்கள் வாய்ந்த அண்ணல் ராமபிரான் பழந்தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் என்பதையும், கொடுஞ்செயல் புரிந்த ராவணன் அரக்கனாக இகழப்பட்டான் என்பதையும் இப்பாடல் வரிகளே ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் விளக்கும்.
– பத்மன்