காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளால் நாடாளுமன்ரம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எப்.சி.ஆர்.ஏ) உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை பட்டியலிட்டார். அப்போது அவர், “இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்கவில்லை, இந்த செயலை நான் கண்டிக்கிறேன்.இது குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிடுவார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெளிவாக கூறினார்.ஆயினும் அவர்கல் குழப்பம் விளைவித்தனர்.ராஜீவ் காந்தி அறக்கட்டளை (RGF) மற்றும் ராஜீவ் காந்தி தொண்டு அறக்கட்டளை (RGCT) ஆகியவற்றின் எப்.சி.ஆர்.ஏ உரிமங்களை அக்டோபர் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் எப்.சி.ஆர்.ஏ விதிமீறல் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்படுவதைத் தவிர்க்கவே எதிர்க்கட்சிகள் பாரத சீனா எல்லைப் பிரச்சினையை கையில் எடுத்தன. நான் கேள்வி நேர பட்டியலைப் பார்த்தேன், கேள்வி எண் ஐந்தைப் பார்த்த பிறகு, காங்கிரஸின் கவலையைப் புரிந்துகொண்டேன்.அது ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்வி” என கூறினார்.அமித் ஷா இதற்கு இரண்டு காரணங்களைப் பட்டியலிட்டார். 1) ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் சீனத் தூதரகத்திலிருந்து 1.35 கோடி ரூபாய் மானிய நிதி பெற்றது. 2) ஜூலை 7, 2011 அன்று இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஜாகிர் நாயக்கிடம் இருந்து ரூ. 50 லட்சத்தை பெற்றுள்ளது.இது எ.ப்.சி.ஆர்.ஏ விதிகளுக்கு முரண்பட்டது. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக நிதியைப் பயன்படுத்துதல், விரும்பத்தகாத நோக்கங்களுக்காக அதைத் திசைதிருப்புதல், நிதி ஆதாரம் மற்றும் பயன்பாடு குறித்து அரசுக்குத் தெரிவிக்காமல் இருப்பது மற்றும் இந்த நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாதது போன்ற சட்டத்தின் பல விதிகளை அவர்கள் மீறியதை அரசாங்கம் கண்டறிந்த பின்னர் அவை தடை செய்யப்பட்டன. அவர்கள் நாடாளுமன்றத்தை நடத்த அனுமதித்திருந்தால் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பேன், முறையான பதில் அளித்திருப்பேன். ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் ஏன் 50 லட்சம் ரூபாய் கொடுத்தார் என ராஜீவ் காந்தி அறக்கட்டளையை நடத்துபவர்களிடம், அதாவது காந்தி குடும்பத்திடம் கேட்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.