உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாரதத்தின் முதலாவது பன்மைய (polycentric) செயற்கை முழங்காலை சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். ‘கதம்’ என்று அழைக்கப்படும் இந்த ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பு, சொசைட்டி ஃபார் பயோமெடிக்கல் டெக்னாலஜி மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, முழங்காலுக்கு மேல் உள்ள செயற்கை உறுப்புக்கான பாலிசென்ட்ரிக் முழங்கால் ஆகும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த செயற்கை முழங்கால் குறைந்த விலை கொண்டது. பயனர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களை சமூகத்தின் ஒரு பகுதியாக இணைப்பதுடன், அன்றாட சவால்களையும் எதிர்கொள்ளச் செய்வதே இதன் நோக்கம் ஆகும். இதனை உருவாக்கியுள்ள சென்னை ஐ.ஐ.டியின் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத்தின் குழுவினர்தான், ‘அரைஸ்’ எனப்படும் நிற்கும் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலியை நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கி வணிகப்படுத்தினர். உள்புறத்திலும் வெளியிலும் பயன்படுத்தும் வகையில் நியோ ஃபிளை- நியோ போல்ட் எனப்படும் சக்கர நாற்காலி, தடையற்ற மோட்டார் பொருத்தப்பட்ட அமைப்பு தயாரிக்கப்பட்டதும் இதே மையத்தில்தான். மனித இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள R2D2 மையம், இயக்க குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு, உதவி சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றிலும் ஆய்வை மேற்கொண்டுள்ளது.