அரசு பணத்தில் மதமாற்ற சங்கங்களா?

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களின் வழியாக ஆதரவற்ற, வயதான முஸ்லிம் விதவைகள், ஏழை முஸ்லிம்கள், கிறிஸ்தவ மகளிர்க்கு நிதயுதவிகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே மாவட்டத்திற்கு ஒன்று என முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேவைக்கேற்ப அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்கள் கூடுதலாக துவக்கப்படும் என, சட்டசபை மானிய கோரிக்கையில் அமைச்சர் மஸ்தான் அறிவித்தார். அதன்படி, 3 மாவட்டங்களில் ஆறு முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்கள் துவக்கவும் அதற்கு அரசின் பணம் தலா 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் தி.மு.க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுபோல சங்கங்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில்தான் மதமாற்றங்கள் பாரதம் முழுவதும் நடத்தப்படுகிறது. அரசின் நிதியுதவிகள், வெளிநாட்டு பணம், நன்கொடைகள் எல்லாம் மதமாற்றத்திற்கே மடைமாற்றம் செய்யப்படுகின்றன. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது கிறிஸ்தவ மதத்தை பரப்ப, அரசின் பணத்தை கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரிவழங்கி மதமாற்றத்தை வெளிப்படையாகவே ஊக்குவித்து வருகிறார்.

தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசும், சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கிறது. ஹிந்துக்களிலும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் உள்ளனர். அவர்களுக்கு தி.மு.க அரசு இதுபோல எதாவது உதவிகள் இதுவரை செய்தது உண்டா? அப்படி ஒருவேளை அளித்திருந்தாலும் அரசின் பணமா அல்லது கோயில்களில் பக்தர்கள் அளிக்கும் நன்கொடையை ஹிந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக பிடுங்கி அளிக்கப்பட்ட பணமா?

சிறுபான்மையினருக்கு உதவ ஜமாத்துகள், மிஷனரிகள் உள்ளன. அவர்களிடம் ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் புரள்கிறது. அவர்களுக்கு அரசுப் பணம் தேவையே இல்லை. ஆனால் ஹிந்துக்களுக்கு? ஒருவேளை அரசு அவர்களுக்கு உதவ விரும்பினால் கண்டிப்பாக உதவலாம். ஆனால், ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் கதையாக ஹிந்துக்களை ஒதுக்குவது முறையா? மக்கள்தொகை அடிப்படையில் அவர்களுக்கும் உரிய பங்களிப்பை அளிப்பதுதானே நியாயம்? அதனை செய்யாத அரசு நியாயம் தவறியதாகத்தானே கருதப்படும்? ஹிந்துக்களிடம் வரிப்பணத்தையும் ஓட்டுகளையும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வரிப்பணத்தை செலவிடாமல் அதனை மற்றவர்களுக்கு மட்டும் செலவிடுவது தர்மமா?

இதுதான் இவர்களின் நடுநிலையா? இத்தகைய சார்பு அரசாட்சியைதான் இந்திய அரசியலைப்பு சட்டமும் நீதி நூல்களும் போதிக்கின்றனவா? இதுதான் இவர்களின் நெஞ்சுக்கு நீதியா?

மதிமுகன்