பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,400 கோடி மதிப்பில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை (ஐஐசிசி) நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார். மாநாடுகள், வர்த்தக சந்திப்புகள், கூட்டங்கள், கண்காட்சிகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஏற்படெல்லி துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் பகுதி திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு ‘யஷோபூமி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
8.9 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில், முதற்கட்டமாக 73 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மையம் கட்டப்பட்டுள்ளது. இதில் 15 மாநாட்டு அரங்குகளும், 13 கூட்ட அரங்குகளும் உள்ளன. 11,000 பேர் வரையில் இங்கு கூட முடியும். ரூ.5,400 கோடி மதிப்பில் இம்மையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் டெல்லி பிரகதி மைதானத்தில், சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ரூ.2,700 கோடி மதிப்பில் பாரத் மண்டபம் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது டெல்லி துவாரகா பகுதியில் ரூ.5,400 கோடிமதிப்பில் ‘யஷோபூமி’ திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் டெல்லிவிமான மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையத்தைத் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், “யஷோபூமி சர்வதேச மக்களை ஈர்க்கக்கூடியதாக திகழும். தொழில் நிறுவனங்கள், திரைப்படத் துறையினர் தங்கள் கூட்டங்களை, விருது விழாக்களை இந்த மையத்தில் நடத்தும்படி அழைப்புவிடுக்கிறேன்.
இந்த மையம் மூலம் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். பாரத் மண்டபமும், யஷோபூமியும் இந்தியாவின் அந்தஸ்தை உலக அரங்கில் உயர்த்தும். இவ்விரு மையங்களும் இந்தியாவின் கலாச்சாரத்தை உலக அரங்கில் பிரதிபலிக்கும்” என்று தெரிவித்தார். இந்தப் புதிய மையம் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்களுக்கு யஷோபூமி மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். பாரத் மண்டபம் மற்றும் யசோபூமி மூலம் நாட்டின் வர்த்தகம், தொழில்,ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக் கும்” என்று தெரிவித்தார்.