ஊருக்கு உபதேசிக்கும் அமெரிக்கா!

சீன ஏற்றுமதி நோய் காரணமாக, இழந்த வாழ்வாதாரத்தை மீட்கவும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணியிலும் உலகமே மூழ்கியிருக்கும் வேளையில், தனது நாட்டாண்மைத்தனத்தை மீண்டும் துவக்கியுள்ளது அமெரிக்கா.சில நாட்களுக்கு முன்பு மனித உரிமைக்கான அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா. உரிமைகளை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மதச் சுதந்திரம் இல்லையென ‘கவலை’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது.

சர்ச் எரிப்பு முதல் சிறுபான்மையினர் மீதான மதப் பாகுபாடு வரை சகல விதமான வெறுப்பு பிரச்சாரங்களுக்கும், கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறை களமான அமெரிக்கா இருப்பது அனைவரும் அறிந்ததே.அடிப்படைவாத, கம்யூனிஸ, சர்வாதிகார நாடுகளான சீனா, பாகிஸ்தான், வட கொரியா, ஈரான், சவூதி அரேபியாவுடன் பாரதத்தையும் இணைத்து இந்த அறிக்கையில் தனது விஷமத்தனத்தை வெளிகாட்டியுள்ளது அமெரிக்கா. உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் தடை நடவடிக்கைக்கு முதல்படியாக இந்த அறிக்கை கருதப்படுகிறது.

இந்த ஆணையத்தின் அறிக்கை ஒருமனதாக வெளியிட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. அந்த ஆணையத்தின் உறுப்பினராக உள்ள ஜானி மோர், “உலக நாடுகளில் இந்தியாவில் கவலை அளிக்கக்கூடிய நிலை ஒன்றுமில்லை. அவர்களின் பன்முகத்தன்மை போற்றுதலுக்குரியது. அவர்களின் மதம் சார்ந்த வாழ்வு வரலாற்றில் மாபெரும் ஆசிர்வாதமாக இருந்து வருகிறது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மற்ற நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைப்பதை நிறுத்திக்கொண்டு முதலில் தங்கள் நாட்டில் உள்ள கருப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா முடிவு கட்டட்டும்.

கருப்பின மக்களுக்கு எதிரான இனவெறி, அமெரிக்க அரசில் தொடங்கி, காவல்துறை, அரசியல், நீதிமன்றம் என பரவலாக அனைத்து இடங்களிலும் உள்ளது.
கருப்பின அமெரிக்கர்கள், நீதியை எதிர்பார்க்க முடியாது என நினைத்து அச்சச் சூழலிலேயே தங்களின் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். சிறிய குற்றங்களுக்காக அவர்களின் உயிரையே இழக்க நேரிடுகிறது. இதுபோல வெள்ளை நிற அமெரிக்கர்களுக்கு நடப்பதில்லை. இதற்கு அண்மையில் ஓஹியோ மாகாணத்தில் 16 வயது சிறுமிக்கு எதிராக நடந்த நிறவெறி தாக்குதலே சாட்சி. தன்னைத் தாக்க வந்த இருவருக்கு எதிராக சமையல் கத்தியைக் கொண்டு தற்காக்க முயன்ற அந்தச் சிறுமியை, கொலைகாரி என கட்டம் கட்டி அவரின் மார்பை 4 குண்டுகளால் துளைத்து கொலை செய்துள்ளது அமெரிக்க காவல்துறை.
கடந்த 6 ஆண்டுகளில் நடந்த காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் சராசரியாக 10 லட்சம் மக்கள்தொகையில் 34 கருப்பின மக்களும் 14 வெள்ளையின மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

தற்போதைய ஜோ பைடன் வரை அனைத்து அமெரிக்க தலைவர்கள் இனவாதத்திற்கு எதிராக முடிவு கட்டப்படும் என்கின்றனர். ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி, அமெரிக்க சமுதாயத்தில் இனவாதம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கருப்பின மக்கள் தங்களின் வாழ்க்கையை வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே மிகுந்த கண்ணீருடன் நடத்திவருகின்றனர்.அங்குள்ள மத சிறுபான்மையினருக்கும் இதே நிலைதான். 2019ல் நடந்த கணக்கெடுப்பில் 82 சதவீத மக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், 64 சதவீத மக்கள் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு பார்ப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மூன்றில் ஒரு அமெரிக்க பூர்வக்குடிகள் தாங்கள் தினந்தோறும் அடக்குமுறைகளும் அதிக துன்புறுத்தல்களுக்கும் ஆளாகுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இப்படியிருக்கையில் உலகிற்கு மதச் சுதந்திர உபதேசம் செய்கிறது அமெரிக்கா. இந்த நடவடிக்கையில் இருந்து தப்புவது அமெரிக்காவுடன் நட்புறவில் உள்ள மேற்கத்திய கூட்டு நாடுகள் மட்டுமே.பிரிட்டனில் நடைபெறும் இனவாதம் பற்றி கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றில், பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றும் 3.5 லட்சம் கருப்பின, ஆசிய போர்வீரர்களுக்கு நினைவுகூரும் நிகழ்ச்சிகள் சரியான முறையில் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வீரர்களும் பிரிட்டனுக்காகப் போரிட்டு தங்கள் உயிரைத் துறந்தவர்கள் தானே? அவர்களுக்கு ஏன் பாகுபாடு? பிரிட்டனும் அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவு நாடுகள். இந்த இரு நாடுகளும் தங்களைத் தாங்களே சமத்துவக் காவலர்கள் என சுயத் தம்பட்டம் செய்துக் கொள்கின்றன.

அமெரிக்காவின் உபதேசமெல்லாம் ஆசிய நாடுகளுக்கு மட்டுமே. அமெரிக்காவில் அடிமைத்தனம், இனவாதம் என துவங்கி தற்போதைய துப்பாக்கிச்சூடு வரை நடந்த அனைத்தையும் முழு பூசணிக்காயைப் போல மறைக்கவே அமெரிக்கா இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தன்னை நியாயவாதி போல அமெரிக்கா எத்தனை காலம்தான் காட்டிக்கொள்ள முடியும்? அந்நாட்டை நோக்கி உலக நாடுகள் கேள்வியெழுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.