இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக இவர்கள் 12 டி படிவத்தை வரும் 12ம் தேதிக்குள் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இப்படிவத்தைப் பூர்த்தி செய்து வைத்திருந்தால், வரும் 12 முதல் 16ம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கே வந்து பெற்றுக்கொள்வார்கள். இதனுடன் மாற்றுத்திறனாளிகள் அதற்கான அரசு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப் பட்டவர்களும் சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் அலுவலர், அனைத்துப் படிவங்களையும் சரிபார்த்து, தபால் ஓட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதனை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி, தேசத்தை வளர்க்கும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.