போர்ச்சுகல் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான துவார்த்தே பச்சேகோ, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தன் முதல் பயணமாக பாரதம் வந்த அவர், நாடாளுமன்ற அலுவல்களை பார்வையிட்டார். அவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், இரு அவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து துவார்த்தே பச்சேகோ பேசுகையில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாரதம், மற்ற நாடுகளால் மதிக்கப்படுவதோடு ஓர் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. தனது நலத்துக்கு மட்டுமல்லாமல், சர்வதேச நலனிலும் அக்கறை கொண்ட நாடாக பாரதம் திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பொருளாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் சாதனை புரிந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தத்தை போர்ச்சுகல் வரவேற்கிறது. அதில் நிரந்தர உறுப்பினராகும் பாரதத்தின் முயற்சிக்கு போர்ச்சுகல் தன் முழு ஆதரவை அளிக்கும்’ என கூறினார்.