அகில பாரதிய சந்த் சமிதி மற்றும் கங்கா மகாசபாவின் பொறுப்பாளரான சுவாமி ஜிதேந்திரநந்த் சரஸ்வதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை பல சவால்களை ஏற்படுத்தி வருகிறது. அதை மத்திய அரசு சரிவர நிர்வகிக்க முடியவில்லை. எனவே, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை சரிபார்க்க, கட்டுப்படுத்த உடனடியாக ஒரு சட்டத்தை கொண்டுவர அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என கோரியுள்ளார். மேலும், அம்மனுவில், வளர்ந்து வரும் மக்கள் தொகை நாட்டின் வளங்களை திணறடிக்கிறது, மக்களுக்கு சரியான உணவு, மருந்துகளை வழங்க அரசால் முடியவில்லை. இது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. உலகளாவிய நிலத்தில் நமது நாடு, 2 சதவீதத்தையும் உலகளாவிய நீர்வளங்களில் 4 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் உலக மக்கள் தொகையில் 20 சதவீதத்தை கொண்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 20 ம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. பா.ஜ.க தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய, நீதிமன்றத்தில் ஏற்கனவே இதே போன்றதொரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும், இது குறித்து பதிலளிக்க நீதிமன்றம் ஜனவரி 10ல், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.