பெரும் கொடையாளர்; மனிதநேயர்; ஆரவாரம் இல்லாத அமைதி; எதையும் தெளிவு, நிதானம், விவேகத்தோடு வகை தெரிந்து வாழும் சீலம்; பழுதுபடாத உறுதிப்பாடு; சமய இலக்கியத் திருப்பணியில் ஆழ்ந்த ஈடுபாடு என்று தமிழ் மொழிக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் காந்திய நெறிகளுக்கும் அரணாக இருந்து போற்றத்தக்க நிறைவாழ்வு வாழ்ந்து, பக்தியில் தோய்ந்த பெருமகனார் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள்.
மகாலிங்கம் அவர்கள் 1952ல் இருந்து 1967 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். “வெள்ளைக்காரனை அனுப்பிவிட்ட பிறகும் நம்முடைய வெப்பம் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்களைப் போல் உடை உடுத்தி அவதிப்பட அவசியம் நமக்கில்லையே. நமக்கென்று இருக்கும் பண்பாடு மிகவும் உயர்ந்தது. காந்தியின் மொழிப்பற்று, எளிமை எனக்கும் பிடிக்கிறது,”என்கிற சுதேசி கருத்தில் பிடிப்புள்ளவர்.
சக்தி இன்டஸ்ட்ரீஸ், சக்தி இதழ் போன்று சக்தி என்ற பெயரில் பலப்பல நிறுவனங்களின் தொழிலதிபராக விளங்கிய அருட்செல்வரைப் பட்டங்களும் விருதுகளும் தேடி ஓடி வந்தடைந்ததில் வியப்பில்லை. அவருக்கு 2007ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் ஆன்மிகம், கல்வி நிறுவனங்களுடன் அவர் ஈடுபாடு கொண்டிருந்த ஈடுபாடு அவருக்கு நிகர் அவரே என அறிவியலாளர்கள், மெய்யாளர்களையும் இன்றளவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
கல்வி நிலையங்களிவ் தொழில் ரீதியான முன்னேற்றங்களைக் காண்பதற்கேற்ற போதனா முறைகளைச் சிந்தித்துச் செயல் படுத்திய சிந்தனைச் சிற்பி. காந்திய சிந்தனையாளரான நா.மகாலிங்கம் காந்தி பிறந்தநாள் அன்றே தன் 91 வயதில் மறைந்தார்.
பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பிறந்த தினம் இன்று