ஆக்ஸிஜனுக்கு அனுமதி

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் டேங்கர்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்படி அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநிலங்களுக்கு இடையே எளிதான போக்குவரத்தை மேற்கொள்ள அனைத்து ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளுக்கும் அனுமதிக்கு பதிவு செய்வதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. தேவைக்கேற்ப ஆக்ஸிஜனை விநியோகிக்க, மாற்று ஓட்டுநர்களுடன் டேங்கர் லாரிகளை 24 மணி நேரமும் இயக்குவதை உறுதி செய்யும்படி மாநிலங்கள், போக்குவரத்து உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனைத்தவிர, ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் ஆலைகளும், போதிய பாதுகாப்புடன் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்படும். தொழிற்சாலை சிலிண்டர்களையும், சுத்திகரிப்பு செய்து மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பயன்படுத்தி கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆக்ஸிஜன் டேங்கர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, நைட்ரஜன் மற்றும் அர்கான் டேங்கர்களையும், ஆக்ஸிஜன் டேங்கர்களாக மாற்ற அனுமதிக்கப்படும். மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.