உலகெங்கிலும் தற்போது செய்தி நிறுவனங்களின் அச்சு சந்தாக்கள் குறைந்து வருகிறது. ஆனால்,இணையத்தில் இந்த செய்திகளை குறித்து இணைய தேடுதலில் காட்டும் கூகுள், அதில் வெளியாகும் விளம்பரங்களிலிருந்து கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகிறது. ஆனால், அதிலிருந்து செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதில்லை. இது குறித்து கடந்த 2020-ல் பிரான்சை சேர்ந்த பல செய்தி நிறுவனங்கள் போட்டி ஆணையத்தில் புகாரளித்தனர். இது தொடர்பாக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆணையம், கூகுளுக்கு உத்தரவிட்டது. அதனை கூகுள் கண்டுகொள்ளவில்லை. எனவே இவ் வழக்கில், பதிப்புரிமைக்குட்பட்ட செய்திகளுக்கு தகுந்த தொகையை ஊடக நிறுவனங்களுக்கு 2 மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாளொன்றுக்கு 8 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடாக செலுத்த வேண்டியிருக்கும் என ஆணையம் கூகுளை எச்சரித்தது. மேலும், போட்டி ஆணையம் அதன் வரலாற்றில் இதுவரையில்லாத அளவு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்தது. இதற்கு, போட்டி ஆணையத்தின் இத்தீர்ப்பு மிகவும் அதிருப்தி அளிப்பதாக கூகுள் அறிக்கை வெளியிட்டுள்ளது.